கடவுளின் தரிசனம்_ குமரேசன் கிருஷ்ணன்

சக்கரங்களின் உரசல்களுடன்
சடசடவென்ற சத்தத்துடன்
மெல்ல நகரத்துவங்கியது
புகைவண்டி ...

பயணிகளின்...
சிறுசிறு செயல்களில்
தொற்றிக்கொண்ட
படபடப்பும் ..அவசரமும்
என்னையும் துரத்த

கொஞ்சம் ஆசுவாசப்படுத்த
சன்னலோரக் காற்றை
முழுவதும் உள்வாங்கி
மூச்சுவிடப் பழகிக்கொண்டிருந்தேன்
சிலநொடிகள் ...

தூரத்தில் தெரிந்த
பறவைகளையும் ..பசுக்களையும்
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தி
தானும் மழலையாய் ...மாறத்
தவித்துக்கொண்டிருந்தாரொரு
தந்தை ...

திடீரென எழுந்த
தன் குழந்தையின் அழுகுரலைக்கண்டு
பசியமர்த்த இடம்தேடி
தூளியாக்கிய தன்சேலைக்குள்
தூங்க வைத்துக்கொண்டிருந்தாள்
தாயொருத்தி ...

எதையும் பொருட்படுத்தாது
தான் கொண்டுவந்த
உணவை உண்டபின்
மறவாது மாத்திரைவிழுங்கி
மகனிடம் அலைபேசியில் பகிர்கிறார்
பெரியவரொருவர் ...

இளவட்டங்களைத் தேடிப்பிடித்து
திருநங்கைகள் வம்பளந்து
தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு
புன்முறுவல்களுடன்
நகரத்துவங்க ...

டீ..காபி என்ற குரல்
நெருங்க ..நெருங்க
மனதுள் சுறுசுறுப்பு
தானாய் ஏற
கண்கள் தேநீரை தேடுது
அனிச்சையாய் ...

அடுத்த நிறுத்தத்தில் நின்ற
புகைவண்டியில்
முண்டியடித்தபடி ...ஒர்க்கூட்டம்
ஏறி..இறங்க...

நடக்கவியலா மனிதனொருவன்
நடைபாதையை சுத்தம்செய்தபடி
நடைமேடையில் எதிர்ப்பட்டவரிடம்
பிச்சை யாசித்தவாறு
தன் உடலை இழுத்து நகர ...

புதியதாய் எதிரில் வந்தமர்ந்த
ஒருஜோடி குடும்பத்தைக் கண்டு
சற்று நேரம் மனம்
சலனத்தில் உறைய ...

வாய்பேசவியலா அச்சிறுமி
ஏதேதோ தன் தாயிடம் சைகையால்
வினவியபடி வர
யாருமறியாதவாறு
தன் விழிநீரைத் துடைத்தபடி
தன் மழலையின் கேள்விகளுக்கு
விடைபகிர்கிறாள் அத்தாய்...!

கடவுளின் குழந்தையையும்
கடவுளின் தரிசனத்தையும்
கண்ட புண்ணியத்தில்
கண்ணுக்குத் தெரியாத
கடவுளைச் சபித்தபடியென்
நிறுத்தத்தில் ..நான்
இறங்கிக்கொள்ள ...

இறங்க முடியாதபடி
இன்னமும் தொடர்கிறது
மிச்சமிருக்கின்ற வாழ்க்கை ...?
-------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (29-Jun-15, 5:23 am)
பார்வை : 968

மேலே