மனசாட்சி -முஹம்மத் ஸர்பான்

தேகம் மறந்ததோர் நல்லாடை
அகம் புனைந்ததோர் திரைச்சேலை
முகமில்லாத கொடிய மிருகம்
வேகமாய் நடக்கும் பாதத்தின் மனிதனுக்குள்.

உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி
நன்மைக்கும் பாவத்திற்கும் அடையாளம் மனிதன்
மனிதனை படைக்கும் போது கடவுள்
உள்ளமெனும் பூட்டுக்கு சாவி கொடுக்க மறந்து விட்டான்,

ஆமை போல் நடக்கும் உள்ளத்தில்
ஊமையாகிறது கண்கண்ட நிஜங்கள்.
கேலிச்சிரிப்பும் வெட்டிப்பேச்சும் இதழில்..,
துரோகமும் நயவஞ்சகமும் சதைக்குள்...,

அழகான நீல வானம் மண்ணிடம் பொறாமைப்பட்டு
இருளாய் எரிகிறது,வானவில் வர்ணப்பூக்களும்
பெண்ணைக்கண்டு உதிர்கிறது,மனிதனும் பாவ
ஓட்டத்தில் தடயம் வைத்து மனதை வேசமாற்றுகிறான்.

மனம்,மனச்சாட்சி ஆகிய இரண்டும்
விற்பனையாகும் அங்காடிச்சந்தை யுகம்
மெளன விரதம் கூட இருக்காத மனிதர்களில்
பேச வேண்டிய மனச்சாட்சி ஊமையாகிவிட்டது.

நான்கு வேத நூல்களும் தோற்றுவிட்டது
மனிதனின் மனச்சாட்சியோடு போட்டியிட்டு...,
உயிரற்ற உடம்பு துர்வாடை வீசவில்லை
அழுக்கடைந்த மனதுதான் நாற்றமடிக்கிறது.

உலகில் ஓடும் ஜீவநதியின் அலைகளே!
இந்த மானிட கதையை கேட்டுவிட்டு....,
மண்ணில் பிறந்த மனிதனெல்லாம்
மனச்சாட்சியை விலைபேசி விற்றுவிட்டனர்.

நண்பனும் பகையாக,பகைவனும்
தோழனென நினைக்கும்,கள்ளியும்
ரோஜாவாகும்,காம சூத்திர பக்கங்களையும்
வள்ளுவன் குறள் என்று படிக்கச் சொல்லும்.

மென்மையான பூக்களும் முரடான புற்களாகும்,
வேற்றான் கைபட்ட தண்ணீரும் விஷமென
நினைக்கச் சொல்லும்,நிலையில்லா உலகில்
அழிந்து போகும் பொருளில் இச்சை கொள்ளும்.

எரிமலை குமறிடும் செந்தணல் கதிரும்
தண்மையாய் அணைக்கும்,ஆழ்கடல்
அலையின் நீரும் நெருப்பாய் சுட்டிடும்
அது ஒரு நாள் நிச்சயம் உண்மை உணரும்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (4-Jul-15, 1:05 am)
பார்வை : 483

மேலே