தர்மத்தின்படி - கற்குவேல் பா
தர்மத்தின்படி
~~~~~~~~~~
நள்ளிரவுப் பேருந்தில்
ஏதோ ஒரு ராமனுக்கு
சீதையாக மாற இருந்தவள்
பயணம் மேற்கொண்டிருக்க
ராவணனின் உருவாய்
நான்கு கயவர்களின்
கைகளில் சிக்கி
அவளது சீலை
களையப்படலாம்
காரணமறிந்த கண்ணனும்
அவளுக்கு சீலையை
காற்றில் தர மறுத்திருக்கலாம்
காப்பாற்ற மறந்திருக்கலாம்
கதறிக் கண்ணீர் வற்றியவள்
வேதனைத் தழும்புகளுடன்
ஒற்றைக்கால் கொலுசுடனும்
நீதி வேண்டியே
அரசவைப் புகலாம்
அங்கே
உருவப்பட்ட அவளது
சீலையின் - நுனியில்
கிழிக்கப்பட்ட சிறு துணி
நீதி தேவதையின் கண்களை
கட்டிப் போட்டிருக்கலாம்
அதற்குப் பின்புறம்
சிரித்த முகத்துடன்கூடிய
காந்தி நோட்டுகள்
அகிம்சை முறையில்
பரிமாறப்பட்டிருக்கலாம்
மீண்டுமொருமுறை
தலைகுனிந்தே
தோற்றுப்போயிருக்கலாம்
தர்மம் தர்மத்தின்படி !!!
-- கற்குவேல் . பா