மரமும் மழையும்
மரம் வளர்த்தால் மழையுண்டு
மனம் இருந்தால் வழியுண்டு
சிரம மேதும் பாராமல்
செடிகள் நட்டு வளர்ப்போமே!
காடு நிறைந்த பூமியில்
காலம் முழுதும் மழை வரும்
நாடு செழிக்கும் வழிஇதை
நாமும் உணர வேண்டுமே
மேகக்கூட்டம் திரளுமே
மின்னல் வந்து மிரட்டுமே
தாகம் தீர பொழியுமே
தரணி எங்கும் விளையுமே
ஏழு வண்ண வானவில்
எளிமையான ஓவியம்
வீழுகின்ற மழைத்துளி
உலகைகாக்கும் உயிர்த்துளி
சிறு துளிகள் சேர்ந்து தான்
பெரிய வெள்ளமாகுமே
ஒரு துளியும் பழுதில்லை
உணரவேண்டும் அனைவரும்
மழையைப்போல யாவரும்
மற்றவர்க்கு உதவலாம்
மனிதநேயம் காக்கவே
மனதில் உறுதி ஏற்கலாம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
