தண்டனை

அந்தப் பரந்த
சோலையில் நான்
காலெடுத்து வைக்கின்றேன்

காலைப் பொழுதை ஒத்த
சூழ்நிலை..
எங்கும்
ஆளை மயக்கும்
தெய்வீக வாசனை....

அருவிகளின் சலசலப்பு...
வண்டுகளின் ரீங்காரம் ...
பட்சிகளின் சங்கீதம் ...
வண்ணப் பூக்களின்
வரவேற்பு...


மெது மெதுவாக
முன்னே நடக்கிறேன்....

திடீரென என் முன்னே
என் தேவதை
புது மணக் கோலத்தில்...

என்னை நோக்கி
ஓடி வருகின்றாள்

எனக்குள்
அப்படி ஒருவியப்பு...இவள்
எப்படி இங்கு என்று...

வைத்த கண் வாங்காமல்
அவளையே பார்க்கிறேன்..

சந்தேகம் இல்லை
அவளேதான்..
நான் உலகத்தில்
என் உயிரை விடவும் நேசித்த
அவளேதான்...
சகலதையும் மறந்து
பைத்தியமாய்
நான் காதலித்த
அவளேதான் ...

உலகில்
அவளை அடைந்து கொள்ள
நாட்களை எண்ணி எண்ணி
தேனாய் அவளோடு
பழகிய வேளை
திடீரென ஒரு நாள்
அப்பாவி என்னை
ஏமாற்றி விட்டாள்

நான் பட்ட துயரத்தை
என்னவென்று சொல்வேன்?
என் இறுதி நாட்களை
ஒரு நடைப் பிணமாகவே
கழித்தேன்..

இப்போது எனக்குப் புரிகிறது ..
புனித என் காதலுக்காய்
என் இறைவன்
சுவனத்தில்
அவளை தந்து விட்டான் போலும் ...

என்னை நோக்கி ஓடி வந்தவள்
என் மார்பில் முகம் புதைத்து
பலமாய் என்னை
தழுவிக் கொள்கிறாள்...
எனக்கு வரும் ஆனந்தத்தை
என்னவென்று சொல்வேன்?

மறுகணம் அப்பால் இருந்து
மனசை உருக்கும்
ஒரு பெரும் கதறல்
கேட்கிறது...

பதறிக் கொண்டே நான்
அங்கே பார்கின்றேன்..
கொழுந்து விட்டெரியும்
நரக நெருப்பின் நடுவில் அவள் ...

எனக்குள் ஒரே குழப்பம்..
அப்படியாயின் என் அணைப்பினுள்
இருப்பவள்?

நெருப்பின் மத்தியில்
தலை விரி கோலமாக அவள்
என்னைப் பார்த்து
கைகளை நீட்டிய வண்ணம் கதறுகிறாள் ...
என்னைக் காப்பாற்றுங்கள்!
என்னைக் காப்பாற்றுங்கள்!

என்னைத் தழுவி இருந்தவளை
என் கைகள்
என்னை அறியாமலேயே
உதறி விட ...
சுவனத்திலும் எனக்கு
அழுகை வருகிறது...

எழுதியவர் : எம். யு மதனி உவைஸ், இலங்கை (12-Jul-15, 2:11 am)
Tanglish : thandanai
பார்வை : 71

மேலே