மீந்துபோன உறவுகள் -Mano Red
படுத்தவுடன்
படுக்கையை பகிர்ந்தது
நெருடலுடன் ஒரு கனவு. !!
காண்பதற்கு ஏதுமில்லாத
காட்சிப் பிழையுடன்,
கல்லெறிந்த குளம் போல
கனவின் முகம் காட்டாமல்
கண்ணாமூச்சி ஆடியது மனம்...!!
உருண்டு புரண்டதில்
உருவான கனவு
உள்ளத்தை உழுது விதைத்து,
உறவுகளின் உலகத்தில்
ஊர்ந்து வர தொடங்கியது..!!
கையில் பூ இருந்தாலும்
மூக்கை ஜன்னலில் நீட்டி
வேறு மணம் தேடும்
கையறு மனம் போல்,
உறவென எல்லாம் இருந்தும்
சருகென தவிக்க விட்டதாய்
கனவின் ஜீவன் பேசியது..!!
மீந்து போன
பழைய உணவாய்
சொந்த பந்தங்கள்,
உண்ணவும் முடியவில்லை
உதறவும் வழியில்லை என
கனவின் பதற்றத்துக்கு
உடல் வியர்த்து சிலிர்த்தது..!!
அந்தரத்தில் பறந்தாலும்
பம்பரத்தில் சுழன்றாலும்
உறவின் சூழலில்
இதுதான் நிச்சயமென
விதி சொன்ன பின்பு
வருந்தி என்ன செய்ய
விரும்பி தான் ஏற்போமென
கனவு மீள் பதிவிட்டது..!!
விழிப்பு தட்டியதும்
கண்ட கனவு
துண்டு துண்டானதாய் நினைவு,
யோசித்து பயனில்லை என
தண்ணீர் குடித்த போது
கண்ணீர் வந்தது
கைகழுவிய உறவுகள் நினைத்து...!!