முற்றத்து மாமரம் தொடர் கட்டுரை-01
வணக்கம்!
நான் தான் முத்தண்ணாவின் வீட்டு முற்றத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாமரம், முற்றத்து மாமரம். முத்தண்ணா, முத்து என்பது அவரது பெயர், பெயருக்கு ஏற்றவாறு ஒரு முத்தான மனிதர் என்று அவரது உறவினர்களும் நண்பர்களும் எனது நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் கூறியிருக்கிறார்கள். முத்து என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது.
ஆனால், கிடைபதற்கு அரிதான ஒன்று என்பது மட்டும் தெரியும். காரணம், ஒருநாள் முத்தக்கா, முத்தண்ணாவின் மனைவி ராணி, முத்தண்ணாவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ‘முத்தக்கா’ என்றுதான் அழைப்பார்கள், முற்றத்தில் அமர்ந்து வானொலிப் பெட்டியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது ‘ஆழ்கடலில் முத்தெடுத்து’ என்ற பாடலைக் கேட்டவுடன் ‘இஞ்சேருங்கோ’ என்று முத்தண்ணாவைக் கூப்பிட்டு, ‘ஆழ்கடலில்தான் முத்து கிடைக்குமாமே, உங்களையும் ஆழ்கடலில் தேடி எடுத்துத்தான் எனக்குத் தந்தார்களோ’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடியது மறக்கமுடியாத பல நிகழ்வுகளில் ஒன்று.
முத்தக்காவும் ஒரு முத்துத்தான். முத்தண்ணவுக்காகத் தேடி எடுத்த முத்து அவர். முத்தண்ணாவின் வாழ்க்கையின் புதிய திருப்பங்களுக்கான திறவுகோல். அதுமட்டுமல்ல, தன்னைத் தவிர எல்லோரையும், எல்லாவற்றையும் சிறப்பாகக் கவனிக்கும் ஜீவன். என்னில் கூட அளவுகடந்த அன்பு அவருக்கு. வீட்டுக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே கைகழுவ வரும்போது என்னை அசுத்தப்படுத்தி விடுவார்கள் என்று எனக்கருகே வர விடமாட்டார்.
என்மீது மட்டுமல்ல, காலம் காலமாக வளர்த்து வந்த, வளர்த்து வருகின்ற நாய், ஆடு, மாடு என்பவற்றுடன் கூட அதே அன்பு தான். நான் இருப்பது ராணியின் வீட்டு முற்றத்தில் தான். திருமணமானவுடன் அது முத்தண்ணாவின் வீடாக மாறி ராணியும் முத்தக்காவாக மாறிவிட்டார். இந்த மாற்றம் முத்தக்காவுக்கு அன்று தொட்டு இன்றுவரை பெருமையாக இருக்கிறது.
முத்தண்ணா திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்தது முதல் இவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் எனது நோக்கம். அதற்கு முன்னர் எனது பிறப்பைப் பற்றி நான் அறிந்துகொண்ட ஆச்சரியமான சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகின்றது.
நன்றி
கே.ஜீ. மாஸ்டரின் தொடர் கட்டுரை.
தொடரும் ...............................................