சில நிகழ்வுகளில் சாரல்

பலமுறை பார்த்திருக்கிறேன் அவரை... சில முறை பல எண்ணங்கள் என் மனதின் புத்தகத்தில் கேள்விகளாய் நிற்கும்... ஏன்? எதற்கு? இறுதியில் இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் செய்து கொள்வேன்...

கந்தலாய், அதன் நிறம் என்ன என்று தெரியாத அளவுக்கு அழுக்கு படிந்து அதன் உருவம் உருக்குலைந்து இருக்கும் ஆடை ...இதுவரை எத்தனை முறை குளித்திருப்பார் என்று யோசிக்கும் அளவுக்கு அவரது தோற்ற அமைப்பு, யார் பார்த்தாலும் பரிதாபம் பொங்கும் அளவுக்கு அவரது முகம்...

அவர் ஒவ்வொருமுறை கை எந்தும்போதும் எனக்குள்ளே ஊசியை வைத்து குத்தினார் போல் ஒரு உணர்வு ...ஆனால் அந்த உணர்வை என் மனம் என் முகத்திற்கு கூட உணர்த்தியதில்லை...அப்பொழுதும் எந்த மாற்றத்தையும் என் முகம் வெளிபடுத்தாமல் அவரை கண்டுகொள்ளாததை போல் வேறு ஒன்றை நோக்கி கொண்டிருக்கும்...

சில நிமிடங்கள் தான் சிக்னலின் காத்திருப்பு என்றாலும் அங்கு வழக்கம் தவறாமல் தன் வேலையை செவ்வனே செய்யும் அவரை மறக்க முடியாது...வயது 60 க்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்...என்னதான் வாழ்க்கை என்று சலித்துகொல்லாமல் எதை நோக்கி அவரது இந்த பயணம்?..

எதற்கு தன்மானத்தையும் சுயமரியாதையும் ஏலம் போடும் இந்த பிழைப்பு?.. எங்கு தங்கி என்னத்தை சாப்பிட்டு தன் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்?.. என் கற்பனைக்கு கூட எட்டவில்லை இதற்கான பதில்...

ஆனால் சொல்லிகொள்ளும்படி எந்த உதவியும் இதுவரை அவருக்கு நான் செய்ததில்லை...என்றாவது ஒருநாள் சிக்னலின் காத்திருப்பும் சூழ்நிலையும் ஏதுவாக அமைந்தால் சில்லறைகளை கொடுத்துவிட்டு செல்வேன்...

சில நேரங்களில் தோன்றும்... கிடைக்கும் பணத்தை வைத்து அவர் ஏதாவது வேலைக்கு செல்லலாமே என்று எனக்கு தெரிந்து உடல் ஊனம் இல்லை...மனநலம் கூட சரியாய் இருப்பது மாதிரி தான் இருந்தது...ஆனால் ஏன் இந்த மாதிரியான நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்... புரியவில்லை...

காரணம் புரியாமலே எனக்குள் பல கேள்விகள்... இது போல் பல அவலங்கள் பல இடங்களில் நிகழ்வது தெரியும், ஆனால் நேருக்கு நேராய் பார்க்கும்பொழுது தான் உரைக்கிறது....என்னை போல் தானே அவருக்குமான வாழ்க்கை எதற்கு இந்த ஏற்ற தாழ்வு என்று கடவுளிடம் கோவித்து கொள்ள தூண்டும் சோகம் அது...

ஆனால் ஒரு நம்பிக்கை மட்டும்... மாற்றம் ஒன்றே மாறாதது என்று.

எழுதியவர் : இந்திராணி (24-Jul-15, 3:16 pm)
பார்வை : 160

மேலே