அக்னிச்சிறகொன்று கண்டேன் - கலாம்

தென் தமிழகத்தின்
கடைக்கோடி
கிராமத்தில் தென்றலாய் பிறந்து...

புயலாய் புறப்பட்டாய்,
புதுமைகள் பல செய்ய
புவியின் விசையை
புரட்டிப்போட
அணுவின் விசையை
அலசி ஆராய...

அன்று, செய்தித்தாள்
விநியோகித்தாய்
நாளைய நாளிதழின்
நாயகன் நான்
என்ற கனவினில்...

இந்தியாவின்
இலட்சியத்தை
கனவாய் கண்டாய்...

அதை,
இளைஞர்களின்
கனவினிலும்
காண செய்தாய்...

மாணவர்களின் கனவுகளில்
மாற்றம் செய்தாய்...
அக்னியின் சிறகினை
விரித்தாய்...வலிமையான
பாரதம் காண்போம் என்றாய்...

நாட்டிற்கு தலைமகன்
நாடி வந்தது தன்னால்
அதுவே பெருமை
அடைந்தது உன்னால்...

வறுமையில் பிறந்தாய்
கடுமையாய் உழைத்தாய்
கனவினை விதைத்தாய்
புவியில் சிறந்தாய்
காலத்தில் நின்றாய்
கலாமாய்..கனவாய்...
விதையாய்...விருட்சமாய்...
இறுதி மூச்சு வரை
கனவுக்காய் உழைத்தாய்...

இன்று நீ
முகம் மூடி
கிடந்தாலும்...

இதோ நிற்கிறது பார்...
உன் முகமூடி
அணிந்த
இளைஞர் பட்டாளம்...

கலாம் கண்ட கனவை நனவாக்க...
இலட்சியக்கனவாக...அக்னிச் சிறகாக...

(இறைவன் உமக்கு ஏற்றமிகு சொர்க்கம் தரட்டும்)


- சகா (சலீம் கான்)

எழுதியவர் : சகா (சலீம் கான்) (28-Jul-15, 7:38 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 570

மேலே