சரித்திரம் பேசட்டும்-கார்த்திகா

"நீங்கள் உறங்கும்போது
வருவது அல்ல கனவு
உங்களை உறங்க விடாமல்
செய்வதே கனவு"

ஒளி கொண்ட கண்களில்
எதிர்காலம் புலர்ந்திட
கனவுகள் செய்யத் தூண்டியது
உம் வார்த்தைகள்..

எழுச்சி தீபம் ஏற்ற
விண்ணில் மட்டுமின்றி
மண்ணிலும் சுடர்விடும்
மேதை நீர் ஐயா...

இலக்கினை வகுத்து
குறி சேர அயராது
உழைப்பாய்!

விடா முயற்சியும்
தன்னம்பிக்கையும் கொண்டு
கடின உழைப்பால்
சிகரங்களை வளைக்கக்
கற்றுத் தந்தவர் நீர்..

இளைஞர்களின் கரங்கள்
தேசத்தை செதுக்கும்
உளியாக அவர்தம்
நேற்றைய கனவுகள்
இன்று என்றாக
வல்லமை கூட்டியது
உங்கள் சொற்கள்!

எளிமையும் வாக்கினில்
விவேகமும் நெஞ்சில்
லட்சியக் கனலும்
எம் வேதம் என்றீர்

அக்னிச் சிறகுகளில்
கனவுகள் தீற்றச் சொல்லிய
இந்திய தேசத்தின்
முதல் குடிமகன் நீரே

ஈரொரு பக்கங்களில்
எழுதிட இயலாது ஐயா
நின் சரித்திரம்

வாழ்வியலோடு கலந்து
இன்னுயிர் பிரிந்ததைப்
பொய்யாக்கிடும்
உங்கள் சொற்கள்

நீர் இல்லா
வெறுமையின் உக்கிரத்தை
அளந்திட மறுக்கும் என்
பேனாவின் கடைசி துளி
மைச் சிதறலும் விழித்தெழும்
மீண்டும் கனவுகளுடன்!!

எழுதியவர் : கார்த்திகா AK (30-Jul-15, 10:29 am)
பார்வை : 152

மேலே