பதின்வயதுக் காதல்
அரும்பாகி மொட்டாகி
மலர்ந்து பூவாகாமல்
அவசரப்பட்டு அவிழ்ந்திடும் முகை.
பூவாகிக் காயாகிக்
கனியாகும் முன்பே
பிஞ்சிலே பழுத்த
பழம் அல்ல வெம்பல்.
முதிர் கனி அல்ல, உதிர் கனி.
இளம்பருவக் கோளாறு.
கானல் நீர் அல்ல,
வெறும் காட்சிப் பிழை.
வாழ்க்கையைத் தொலைத்திட
வாங்கும் வரம்.
உடற்குருதி முழுதும்
காவு கொடுத்து எடுக்கும் புதையல்.
சொந்தக் காசில்
வைத்துக் கொள்ளும் சூனியம்.
ஆகாயத்தை அளக்க நினைத்து
ஆழியில் அமிழ்ந்திடத் துடிக்கும்
அதிசயப் பறவைகள்.
இந்த வயதைப் பத்திரப் படுத்தினால்
எந்த வயதிலும் காதல் செய்யலாம்.
சிகரத்தை நோக்கி
சிறகுகள் உயர்ந்தால்
உம்
சிறகசைப்பைச் சிலாகித்து
இமயம்கூட இறங்கி வரலாம்.