நிலைத்த கண்ணாடியும் நிலையாத முதிர்கன்னியும்

தலைவாரி பின்னலிட்டு 
நிமிர்த்தியாயிற்று
முகப்பூசி திலகமிட்டு
விரலிறகில் கண்களுக்கு
மையிட்டாயிற்று..

காது மடல்களிலும்
கூர் நாசிக்கும் அழகிய
நகைமணி பூட்டியாச்சு....

சரம்சரமாய் கோர்த்த 
மல்லிகையும் ஜாதி முல்லையும்
கருங்கூந்தலை அழகான
வெண் சாமரமாக்கிற்று. 

இளமைப் பொழுதும்
தங்க நிறம்வார்த்து
துள்ளும் நீரின் கயலொத்த
இருவிழியும் பரிமாறியாயிற்று

கடல் முத்தில் விழுந்த
பனித்துளிபோல்
கன்னம் சிவக்க முகப்பரு
நுதல் முன்னே எட்டிப் பார்க்க
மஞ்சள் இட்டு பூசிமறைத்து
மெருகேற்றியாயிற்று...

அதன் பின்னும் ஏன்?
அவன் வரவில்லை
நான் ..............
அழகில்லையென்றா?
உன்னைத்தான் ( கண்ணாடி) கேட்கிறேன்
உனக்கும் புரியவில்லையா ?

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (8-Aug-15, 12:19 pm)
பார்வை : 282

மேலே