இருட்டில் பிறந்தவளே

இருட்டில் பிறந்தவளே,
எங்கே இருக்கின்றாய்.

அன்பிற்கினிய எங்கள்
அருமை மகள் சு(த)ந்தரியை
அடைத்து வைத்துள்ளார்கள் என்று
உன்னைப் பெற்றவர்கள்
என்னிடம் பிராது கொடுத்துள்ளார்.

பத்திரிக்கை விளம்பரத்திற்குப்
பணம் காசு இல்லை என்று
ஏழைகளின் வழக்கறிஞன்
என்னிடத்தில் வந்துள்ளார்.

நீ
சுகப் பிரசவத்திலா
சுடர் முகம் காட்டினாய்.?

கருவறையில் கொடி சுற்றக்
கட்டுண்டு கிடந்தாயே.
உன்னை விடுவித்த மருத்துவச்சிகள்
இங்கே விலா நோக குமுறுகின்றார்.

நீ
ஈன்றவரை நோக்கி என்றேனும்
எழுந்தோடி வருவாய் என
அதீத நம்பிக்கையுடன்
ஆவலாய் இருந்தாராம்.

வருடங்கள் தானே வந்து போயின
நீ வரவில்லையே.
உன்னைப் பெற்றேடுக்கப் பட்ட
இம்சைகள் என்னெவென்று
எப்படித் தெரியும் உனக்கு.

பிரசவ முனகல்கள்கூட
முடியும் முன்னே
ஈன்றெடுத்தவர்கள் ஏமாந்து போனார்கள்

ஜனநாயகத்தின் பணநாயகர்கள்
உன்னை
பங்களாக்களில் பதுக்கி வைத்துக் கொண்டார்கள்.

உன் விழிப் பார்வையின்
வெளிச்ச ரேகைகள்
இவர்களின் மீது
விழுந்துவிடக் கூடாதென
கவனமாகக் காவல் புரிகிறார்கள்.

இது
எமது இறுதி அறிக்கை
எச்சரிக்கை.

உன்னை நியாயத்தின் சபையில்
அவர்கள் உன்னை
ஆஜர் படுத்தட்டும்.

சிசுவிலேயே சிறைபட்டு விட்டவளே
உன்னை
விடுவிக்க நாங்கள்
விரைவில் வருகிறோம்.

நிச்சயம் ஒரு நாள்
சூரியன்
நமக்காகப் புலரும்.

* கவிஞர் டாக்டர்.எழில்வேந்தனின் முதல்நூல் 'பாதையோரத்துப்
பாரிஜாத்தங்கள்’ 1989 வெளிப்பட்ட நாளில் பிரதிகள் அனைத்துமே விற்றுத் தீர்ந்தன. என் கைவசம் ஒரு பிரதி உள்ளது.

எழுதியவர் : எழில்வேந்தன் (15-Aug-15, 11:18 pm)
பார்வை : 219

மேலே