தாலாட்டு

[ முன் குறிப்பு: 16-08-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு எனத்தொடங்கி
மண்ணில் மறைந்தவுடன் மகராசா எனமுழங்கி

வயலோடும் நீரோடும் வயக்காட்டு வரப்போடும்
வயிறோடும் வாயோடும் வாழ்வோடும் சாவோடும்

தமிழனின் அடையாளம் தெரிவிக்கும் ஒரு பாட்டு
தமிழின் முதல்பாட்டு தாய்பாட்டு தாலாட்டு

பொறந்த பிள்ளைக்கும் பசியாறும் பிள்ளைக்கும்
உறக்கம் வரவைக்கும் ஒரு மருந்தே தாலாட்டு

வாடி வதங்கும்நிலை வந்துவிட்ட பின்னாலும்
பாடி பசியடக்கும் புது மருந்தே தாலாட்டு

பால்கறக்க ஒருபாட்டு பயிர்செய்ய ஒருபாட்டு
நாள்முழுக்க எசப்பாட்டு நாம்பாடும் தாலாட்டு

பச்சக் கொழந்தைக்கு பாலூட்டும் தாலாட்டில்
உச்சிக் குளிந்திடுமே உலகம் மறந்திடுமே

வாரி அணைச்சிக்கிட்டு வழிநெடுக்க அவள் பாடும்
ஆரீரோ தாலாட்டு ஆஸ்காரை மிஞ்சிடுமே

நாற்று நடும்போதும் நெல்லறுத்து வரும்போதும்
காற்றாய் வரும்பாட்டில் களைப்பே மறைந்திடுமே

எப்போதும் அழமறந்த இரும்பு மனமும் ஓர்
ஒப்பாரி தாலாட்டில் ஓவென்று அழுதிடுமே

இசையின் பரிணாமம் எத்தனை வளர்ந்தாலும்
இசையின் ஆசானே தாலாட்டின் தாய்தானே

**************** ஜின்னா ****************

எழுதியவர் : ஜின்னா (16-Aug-15, 10:06 pm)
Tanglish : thaalaattu
பார்வை : 523

மேலே