எழுதியது தமிழன் – கே-எஸ்-கலை

படர்கின்ற தமிழ்க்கொடியில் மலர்கின்ற கவிப்பூக்கள் - பல
இடர்நீக்கும் மருந்தாக தினமிங்கு வரவேண்டும் !
தொடர்கின்ற துயரங்கள் துவம்சிக்கும் திறத்தோடு – பெரும்
கடலொத்த தமிழோடு தினந்தோறும் கவிப்பாடு !

திருமுனிவர் குறள்பற்றி திகட்டாத தமிழ்ப்போற்றி – இப்
பெருவெளியில் உழல்கின்ற பிறமொழிகள் பின்தள்ளி
உருவாக்கு உன்னாக்கம் உலகோர்க்குப் புத்தூக்கம் – தரும்
எருவாக்கு, கருவாக்கு இணையற்றத் தமிழோடு !

வீறுதமிழ் பாவலனாம் பாரதியின் வீரமேற்றிப் – பெரு
ஊறுதரும் யாவரையும் “தீ”மொழியால் சுட்டெரிக்க
ஈறுஎல்லை இல்லாத வீரத்தமிழ் பாட்டெழுதி – அரும்
பேறுபுகழ் நிலைத்தோங்கப் பாட்டோடு பாடுபடு !

விழிக்கெட்ட குணத்தோடு தறிகெட்டு அலைந்தோடி - திரு
மொழிவிட்டு மொழித்தாவிச் சிறுமொழிகள் உளறாது,
அழிவற்றப் பெருஞ்செல்வம் அழகானத் தமிழென்று – தினம்
செழிக்கின்றச் செம்மொழியை இதயத்துள் விதைப்போடு !

சகமெல்லாம் சுகமான தமிழோசை இசையூட்டப் - புவி
முகமெல்லாம் இதமான புன்முறுவல் இழையோட,
அகமெல்லாம் தமிழூட்டி அயலோர்க்கும் வழிக்காட்டி - வரும்
யுகமெல்லாம் தமிழோங்கத் தமிழோடு விளையாடு !

எழுதியவர் : கே-எஸ்-கலை (26-Aug-15, 6:24 am)
பார்வை : 177

மேலே