என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 20

சென்ற பகுதியில் வாழ்வில் நடந்த சோகங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன் . இந்த பகுதியில் மாறுதலுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளை ​கூறிட விரும்புகிறேன் .

நான் வங்கியில் பணியில் இருந்தபோது வருடாந்திர பொது கூட்டங்களுக்கும் ( Annual General Meeting ) மதுரைக்கு 20 முறை சென்றது மட்டுமன்றி , இருமுறை குற்றாலத்தில் நடந்த இயக்குனர்கள் கூட்டத்திற்கும் , LFC யில் ஒரு முறை கோவாவிற்கும் , கொடைக்கானல் , ஊட்டி , மைசூர் , பெங்களுர், கோவை என்று சில ஊர்களுக்கும் சென்று உள்ளேன் .

1994 மற்றும் 1996 ம் ஆண்டுகளில் எங்கள் வங்கியின் வளர்ச்சிக்காகவும் , NRI Accounts க்காகவும் , நிர்வாகத்தின் மூலம் , உயர் அதிகாரிகளுடன் இருமுறை அரபு நாடுகளுக்கும் சென்று வந்தேன் . முதல் முறை எங்களுடன் பிரபல இயக்குனர் நடிகர் திரு விசு அவர்களையும் அழைத்து சென்று வந்தோம். அவரின் மனைவி திருமதி உமா விசு அவர்களும் வந்திருந்தார். அவர் மூலமாக , அங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்து , அங்குள்ள இந்தியர்களை , முக்கியமாக தமிழர்களை சந்திக்கவும் பயன்படுத்திக் கொண்டோம் . மிகவும் அருமையான , எளிமையான , நேர்மையான , அன்பான மனிதர் அவர். நல்ல முறையில் பழகினார் . அதன் மூலம் எங்களுக்குள் ஒரு நெருக்கமான நட்பு ஏற்பட்டது ...அது இன்றுவரை தொடர்கிறது என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் . எங்களுடன் அவர் துபாய் , அபுதாபி , ரசல்கைமா , மஸ்கட், ஷார்ஜா, புஜரா போன்ற இடங்களில் உள்ள தமிழர்களை சந்தித்தது மறக்க முடியாத ஒன்று . பலரின் நட்பு கிடைத்தது . அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் அங்குள்ள நண்பர் திரு அன்வர் பாட்சா அவர்கள் செய்து இருந்தார். நல்ல பண்பாளர் . அந்தப் படங்களையும் இங்கே இணைத்துள்ளேன் உங்கள் பார்வைக்காக . நம் இனத்தவர் உழைப்பினால்தான் இன்று துபாய் மிக சிறந்து விளங்குகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. ஆனால் அவர்கள் அங்கே எல்லா விதத்திலும் சிரமப்படுவதையும் உணர்ந்தேன் . பலர் எங்களிடம் குடும்ப நிலைக்காகவே அங்கே சென்றதாகவும் , குடும்பத்தை துறந்து தாங்கள் படும் வேதனைகளை பகிர்ந்து கொண்டது உள்ளம் வலித்தது .

முதலில் நாங்கள் சென்னையில் இருந்து மும்பை சென்றோம். அங்கு இரவுதான் விமானம் என்பதால் திரு விசு அவர்களை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து விட்டு , நாங்கள் எங்கள் மும்பை வட்டார அலுவலகம் சென்றோம். பல நண்பர்களை சந்தித்தேன் . பின்பு ஒரு நண்பர் வீட்டில் , விலே பார்லியில் , மதியஉணவு முடித்துக்கொண்டு சிறிது நேரம் அங்கேயே ஓய்வும் எடுத்துக் கொண்டோம். அதன்பின் நண்பர் திரு விசு அவர்களுடன் மும்பை விமான நிலையம் சென்று EMIRATES விமானம் மூலம் துபாய் பயணிக்க ஆயுத்தமானோம். அப்போது நுழிவாயிலில் எங்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதித்த அதிகாரி , விசு அவர்மனைவி மற்றும் ஒரு அதிகார்யை மட்டும் உள்ளே அனுமதித்தார். நானும் எங்கள் பொதுமேலாளர் திரு கதிரேசன் அவர்களையும் அனுமைதி மறுத்துவிட்டார். அவர் கூறிய காரணம் , எங்கள் பாஸ்போர்ட்டில் ECNR ( emigaration clearance ) தேவை என்று இருந்ததால் ....
எவ்வளவோ வாதிட்டோம் , போராட்டமே செய்தோம் ..அவர் ஒத்துக்கொள்ளவில்லை . அதை Cancel செய்தால்தான் அனுமதிக்க முடியும் என்றார். அதை செய்திட நாங்கள் மறுபடியும் சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில்தான் பெற முடியும் . விமானம் புறப்பட இன்னும் ஒரு மணி நேரமே இருந்தாதால் நாங்கள் பதட்டம் அடைந்தோம். நண்பர் திரு விசு அவர்களும் எவ்வளவோ விவாதித்தார் ..அவருக்கு தெரிந்த சட்டங்கள் மூலமாகவும் ...அரைகுறை இந்தியிலும் பேசி பார்த்தார். வழி ஒன்றும் பிறக்கவில்லை ...அந்நேரத்தில் அங்கே கடந்து சென்ற மற்றொரு விமான நிலைய உயர் அதிகாரி ( தமிழர் ) , திரு விசு அவர்களை அடையாளம் கண்டு அருகே வந்து நலம் விசாரித்து அவரின் ரசிகர் என்றும் பெருமையோடு கூறி கொண்டார். உடனே திரு விசு அவர்கள் அங்குள்ள பிரச்சினை பற்றி எடுத்துக் கூறினார். உடனே அவரும் அந்த அதிகாரியிடம் திரு விசு அவர்களை பற்றி எடுத்து சொல்லி, அவர் ஒரு தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் என்று அறிமுகம் செய்து வைத்து , உடனே இதை தீர்த்து வைத்து உள்ளே அனுமதிக்க கட்டளையிட்டார். பின்பு அவரும் எங்கள் இருவரிடமும் ஒரு சுய விளக்கம் ( self declaration ) எழுதி வாங்கி அனுமதித்தார். விரைவாக உள்ளே சென்று , இருக்கையில் அமர்ந்தவுடன்தான் நாங்கள் நிச்சயம் துபாய் செல்கிறோம் என்று நம்பிக்கையே வந்ததது . மகிழ்ச்சியுடன் திரு விசு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தோம். அந்த தமிழ் அதிகாரிக்கும் எங்கள் அன்பையும் நன்றியினையும் கூறிக்கொண்டோம். இன்றும் அந்த நிகழ்ச்சி பசுமையாக நினைவில் உள்ளது.

திரு விசு அவர்களும் அவர்கள் மனைவியும் எங்களை ஒரு குடும்ப நண்பர்களாகவே பாவித்து , திறந்த மனதுடன் பழகியதை என்னால் மறக்க முடியாது. அதன்பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து திரு விசுவையும் அவர் மனைவியையும் என் வீட்டிற்கு அழைத்து எங்கள் நெருக்கமான உறவுகளுடனும் நண்பர்களுடனும் விருந்து அளித்தேன் . கிட்டத்தட்ட 4 மணி நேரம் எங்கள் வீட்டில் இருந்து அனைவரிடமும் உரையாடி மகிழ்ந்து சென்ற காட்சி என் கண்களில் நிற்கிறது. அப்போது எனது தாய் தந்தையும் உயிருடன் இருந்தனர். அந்த காட்சிகளையும் இங்கே இணைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு .

வாழ்க்கையில் சில சம்பவங்கள் நெஞ்சில் நிலைப்பதும் , ஆனந்தம் அளிப்பதும் என்பது மறுக்க முடியாத ஒன்று .

மீண்டும் சந்திக்கிறேன் ....

பழனி குமார்
25.08.2015

எழுதியவர் : பழனி குமார் (26-Aug-15, 8:57 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 268

மேலே