வாழ்வின் நடனம்
கடந்து முடிந்த
வாழ்வு முழுவதும்
தனிமையானது...
ஒரு வானத்தைப் போல.
பெயர் தெரியாத
ஒரு பூச்சியாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்
பூமியின் ரேகையெங்கும்.
தேடலின் சிறகுகள்
கலகத்தை நேசிக்க
பேரமைதியின் ஒரு துளி
இயக்கமின்மையில்
இயங்குகிறது.
கிறங்கும் பூமியில்
எனது அலைகளுக்குள்
நானே
மூழ்கிப் போகிறேன்.
வாழ்வின்...
மாயத் தன்மையின் சலிப்பில்
அகண்ட பெரும் சூன்யம்
உடைந்து...
ஈரம் சொட்டி
எங்கேயோ கிடக்கிறது.
என் வாழ்வின்
கடைசி அணுவைப் பிளக்கிறது
காலம்.
அளவற்ற அர்த்தத்துடன்
சிரிக்கிறது பூமி
என் இயக்கமின்மையில்
களி நடனம் புரிந்தபடி.