சாதிகள் இருக்குதடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிவிட்டு போய்விட்டார் பாரதி. ஹ்ம்ம்.. ஆனால் எங்கு சாதி இல்லை? பிறப்பு முதல், படிப்பு, வேலை, திருமணம், இறப்பு என எல்லா இடங்களிலும் சாதிதான் வாழ்கிறது. வெகு சிலரே சாதியின் அடையாளத்தை சொல்லாமல் சமூகத்தில் வாழ முடிகிறது. மற்றவர்கள் ஏதாவது ஒரு இடத்திலாவது சாதியை உபயோகிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் இல்லை; நம் பாரதம் முழுவதும் சாதிபற்று வெறி பரந்து விரிந்து கிடக்கிறது.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதில் முக்கிய பங்கு சாதி மதத்துக்கு உண்டு. சாதியை ஒழிப்போம் என்று கூறியவர்கள் யாரும் அதை ஒழிக்க முயன்றதாய் தெரியவில்லை. எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் சாதி அரசியல் தான் நடக்கிறது. கிராம தேநீர் கடைகளில் பித்தளை குவளையில் ஆரம்பிக்கும் சாதி வேற்றுமை, இறந்த பின் புதைக்கும் இடுகாடு வரை நீள்கிறது. சாதியினால் ஏற்படும் வன்கொடுமைகளும், கலவரங்களும், இடஒதுக்கீடுகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழ் நாட்டில் இரு தலைமுறைகளுக்கு முன்னால், பெயர்களுக்கு பின் தங்கள் சாதியின் பெயரை போட்டு கொள்ளும் வழக்கம் இருந்தது. அவர்களின் சாதி என்னவென்று அவர்களது பெயரிலேயே தெரிந்துவிடும். ஆனால் இப்போது அந்த வழக்கம் இல்லை. இருந்தாலும், முழுவதுமாக மறைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது.
இந்த 68 வருட சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் நம் திராவிட கட்சிகள் செய்த சில நல்ல விஷயங்கள்- சுயமரியாதை, பெண்ணுரிமை மற்றும் மக்களின் பெயரில் உள்ள சாதியின் அடையாளத்தை நீக்கியது தான். அதை பெயரளவில் மட்டுமே நீக்கியதுதான் வேதனை.
தமிழக எல்லையை தாண்டி கொஞ்சம் போனாலே, மக்கள் அவர்கள் பெயர்களுக்கு பின்னால் அவர்தம் சாதி /சமூக பெயர்களை போட்டு கொள்வது இன்னும் வழக்கத்தில் உள்ளது. அது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. தவறு என்று நானும் சொல்லவில்லை. சாதியை ஓழிப்போம் என்று கூறிவிட்டு பெயரளவில் மட்டுமே சாதியை பிரித்த நாமும் சரி, சாதியின் பெயரை போட்டு கொள்ளும் மற்ற மாநிலத்தவரும் சரி, சாதியென்னும் சாக்கடையில்தான் இன்னும் வாசம் செய்து கொண்டிருக்கிறோம்.
தற்போது தமிழ் பேசும் மக்களிடையேயும் இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது வருந்தத்தக்கது. சமூக வலைதளங்களில் தங்கள் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை போட்டு கொண்டும், சாதியின் அடையாளமாக விளங்கும் தலைவர்கள், சின்னங்களை படங்களாக போட்டு கொண்டும் திரிகின்றனர்.
அவ்வபோது அவர்கள் போடும் நிலைபாட்டில் தங்கள் சாதியின் பெருமைகளை தம்பட்டம் அடித்து கொண்டும், மாற்று சமூகத்தினரை தரம்கெட்டு ஏசியும் தங்கள் சாதி பசியினை தீர்த்து கொள்கின்றனர். ஒரு சில திரைப்பட/ஊடக பிரபலங்களும் இதில் பசியாறி கொள்கின்றனர். இதையெல்லாம் பெரும்பாலும் செய்வது அந்தந்த சமூகத்தின் இளைய சிங்கங்களே! சில சாதி அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்த செயற்கரிய செயல்களை செய்து வருகின்றனர். நான் இந்த சாதியை/ சமூகத்தை சேர்ந்தவன் என்று சொல்வதில் கேவலமோ, வெட்கமோ தேவையில்லை. பெயரின் பின்னால் சாதியை குறிப்பிடுவது இக்காலகட்டத்தில் தேவையில்லாதது. சாதியின் போர்வையில் மற்றவர்களை திட்டி மனதை புண்படுத்துவதும், வீண் பெருமையும் தேவையற்றது.
இது இப்படியே போனால், நாளை எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சாதியம் தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிடும். சாதி என்ற வேற்றுமை எல்லார் மனதிலும் பதிந்துவிடும்.
"ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட் டோமென்று .." என்று பாரதி பாடிய பாடல் நினைவாகி போனது போல, "சாதிகள் இல்லையடி பாப்பா.." என்று பாடியது என்று உண்மையாகுமோ எனத் தெரியவில்லை.
(நன்றி:-பி .விமல் ராஜ்)