எங்களுக்கு விடை கொடு
அக்னிச் சிறகுகளால்
அன்பாய் வருடிய
ராமேஸ்வரக் கடலலை
நீங்கள்
ஒருபோதும் ஓயப்போவதில்லை...
ஆனாலும் பெரு வருத்தம்
எங்கள் இதயமெனும்
அண்ட வெளியில்
நீங்கள் நிலை நிறுத்திய
தன்னம்பிக்கைச்
செயற்கைக்கோளின்
சுற்றுவட்டப்பாதை
எங்களின் வெற்றிப்பாதையாய்.
.பரிமளித்தது...
இனி அது வெற்றுப்பாதைதான்
இருந்தாலும்
மீதமிருக்கிறது நம்பிக்கை..
உங்களின்
2020 இந்தியாவை அலங்கரித்து
எங்களின்
எண்ண ஏவுகணைகளால்
உங்கள் பார்வைக்கு
அனுப்புகிறோம்..
ஏனெனில்
இனி வான்வெளிதான்
நமது தொடர்பு நிலையம்...
எங்களுக்குத் தெரியும்
ஓய்ந்துபோகாத
உங்களது
அடுத்த ஆராய்ச்சி
உலகைக்காக்கும்
ஓசோன் மண்டலமாகக்கூட
இருக்கலாம்...
சற்று ஓய்வெடுங்கள்..
அண்டவெளியின்
அயல்கிரக மனிதர்கள்
உங்களின் பேட்டிக்கு
போட்டி போடுகிறார்கள்...
இனி
நாங்கள் காணும் சூரியன்
உங்களின் அக்னிச்சிறகுகளை
ஞாபகப்படுத்தும்.
இனி நாங்கள் காணும் சந்திரன்
உங்களின் சாந்தமுகத்தை
ஞாபகப்படுத்தும்.
இனி நாங்கள் காணும் விண்மீன்கள்
உங்களின் எண்ணச்சிதறல்களை
ஞாபகப்படுத்தும்.
மொத்தத்தில்
பூவுலகம் கண்ட
விடையிலா விண்வெளியின்
சாம்ராஜ்ய சககரவர்த்தியை
வானுலகம் வாழ்த்திவரவேற்கும்...
வானிலிருந்து வழிகாட்டும்
நம்பிக்கையில்
கனத்த இதயத்துடன்
துயரக் கண்ணீருடன்
வழியனுப்புகிறோம்
எங்கள்
கண்ணீரைத்துடைத்து
விடைகொடு
எங்கள் தன்னம்பிக்கை நாயகனே..