குளிர்ந்தநீரும் வெந்நீரும்

தாத்தா, பாட்டி மற்றும் பேத்தி மதிய உணவு உண்ண ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், குளிர்ந்தநீர் வேண்டும் என தாத்தா சொன்னார். தனக்குச் சளி பிடித்து இருப்பதால்
வெந்நீர் வேண்டும் என பாட்டி சொன்னார். தாத்தா பாட்டியின் விருப்பத்தை சிறுமி, சமையல் அறையிலுள்ள தன் அம்மாவிடம் சொல்ல, அம்மா, உணவு, குளிர்ந்தநீர் மற்றும் வெந்நீர் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்.
அனைவரும் உண்டனர். பின், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சிறுமி ஒரு கையால் குளிர்ந்தநீர் கொண்டுவரப்பட்ட டம்ளரையும் இன்னொரு கையால் வெந்நீர் கொண்டு கொண்டுவரப்பட்ட டம்ளரையும் தொட்டுப் பார்த்துக்கொண்டே எதோ சிந்தித்துக்கொண்டிருந்தாள். "என்ன ஆயிற்று" என்று வினவிய அம்மாவிடம் விவரிக்க ஆரம்பித்தாள். குளிர்ந்தநீர் கொண்டுவரப்பட்ட டம்ளரில் மீதம் கொஞ்சம் தண்ணீர் உள்ளது. ஆனால் அது குளிருடன் இல்லை. அதே போல், வெந்நீர் கொண்டு கொண்டுவரப்பட்ட டம்ளரில் மீதம் கொஞ்சம் தண்ணீர் உள்ளது. ஆனால் அதுவும் சூடாக இல்லை. அதைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் என்றாள். விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா. குளிர்ந்த நீரை தன் வெப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றும் இயல்பு காற்றுக்கு உண்டு. அதே போல், சூடான நீரையும் தன் வெப்பத்திற்கு ஏற்றாற்போல் குறைக்கும் இயல்பும் காற்றுக்கு உண்டு. காற்றைப் போலதான் நம் வாழ்க்கையும். எத்தகைய மகிழ்ச்சி கிடைத்தாலும் அது நம்மை விட்டுச் சென்று விடும். மிகப்பெரிய கவலை வந்தாலும் அதுவும் தன்னிச்சையாகவே மாயமாகிவிடும். வாழ்க்கை என்பது மிகச்சிறிய பயணம். எனவே, மகிழ்ச்சி அதிகம் வரும்போது செருக்கு இல்லாமல் வாழ்வதும் கவலை வரும்போது மனம் உடையாமல் வாழ்வதும் அவசியம். அகவே, இந்தச் சிறிய வாழ்வில், மற்றவர்களிடம் அன்பு காட்டி வாழ்வதே சிறப்பானது என அறிவுரை கூறி சிறுமியை முத்தமிட்டாள் அம்மா.

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (31-Aug-15, 1:13 pm)
பார்வை : 244

மேலே