ஆளைக் கொல்லும் ஊடல் விடு

இரவின் நொடிகளில்
உன் நினைவின் மடிகளில்
நான் நித்தம் சாகிறேன்
பகலின் வழிகளில்
பார்வை தொலைத்த நான்
உன்னை தேடுகிறேன்
*
*
வல்லூறு நினைவெலாம்
ரெக்கை கட்டி வருகுதே
வந்தமர்ந்து நெஞ்சிலே
நித்தம் கொத்திப் போகுதே
*
நேசம் என்ற ஒன்றாலே
நாளும் ரணங்கள் கூட்டுதே
பாசம் என்ற ஒன்றாலே
பாழுங் கிணற்றில் தள்ளுதே
*
*
உன் அன்பிற்கேங்கும் தேசம் நானடி
அன்பை பொழியும் மேகம் நீயடி
நேசம் மறந்தே போகிறாய்
தேசம் மாறிப் பொழிகிறாய்
வேஷம் போட்டு நீயும்தான்-என்
நெஞ்சில் விஷத்தை ஊற்றிப் போகிறாய்
*
*
சிறகாய் நானும்
வானம் துரத்தினேன் அன்று
சருகாய் என்னை
காலம் துரத்துதே இன்று
*
மண்ணில் சொர்க்கம் கண்டேன்
உன் மடியில் நானும் அன்று
நாளும் நரகம் கண்டேன்
உன் நினைவால் நானும் இன்று
*
*
அமுதை போல ஊற்றினாய்
என்னில் உன் காதலை
அன்பே வந்து பாரடி
நீயும் என் சாதலை...
*
அன்பு கூட விஷமாகும்
அறிந்துகொண்டேன் உன் காதலில்
அழுகை மட்டும் வரமாகும்
அறிந்து கொண்டேன் உன் காதலில்
*
*
உன் நினைவை வந்து வாங்கி விடு
இல்லை
நீயே என்னைக் கொன்று விடு
ஆளைக் கொல்லும் ஊடல் விடு
இல்லை
அன்பே என்னைக் கொன்று விடு
*
ஆளைக் கொல்லும் ஊடல் விடு
இல்லை
அன்பே...
என்னைக் கொன்று விடு...

எழுதியவர் : மணி அமரன் (3-Sep-15, 2:34 pm)
பார்வை : 340

மேலே