நீயே என் சந்நிதியாவாய்...

அந்தி மறைந்து
இருள் சூழ்ந்த தருணம்
இயல்பாய் உன் ஞாபகக்கீற்றுகள்
என் இமைகளுக்குள் தென்றலாய்...
நதியின் போக்கை தடுத்து
நிற்கும் மலைப்பாறையாய்
என் போக்கை தடுத்து நிறுத்தியது
உன் போக்கு...!!
என் ஆழ்மனமோ
உன் போக்கில் மட்டுமே பயணித்தது!

உன் கண்கள் பேசிய
காதல் மொழியில் கட்டுண்டு
நான் கிடக்கின்றேன்...
நீயோ எனை பார்த்தபடியே
விலகிச் செல்கின்றாய்....
இன்றாவது காதலைச் சொல்லலாம்
என்றிருந்தேன்...பாழாய்ப்போன
தயக்கம் வந்து என்னை
தனியே நிற்கவைத்துவிட்டது

நெருப்பை புகை
மறைப்பது போல் எப்போதும்
என் காதலை
மறைக்க இயலவில்லை!
உன் இணக்கமான பேச்சு
தற்காலிக சந்தோஷமாக
இருந்தே மறைந்து போகின்றன!
கலப்படமற்ற சந்தோஷம் காண
உன் நேசம் ஒன்றே சுகமாகும்!

சொற்களைக் கூட்டினால்
சுலோகம்!
கற்களைக் கழித்தால்
சிற்பம்!
கூட்டலும் கழித்தலும்தானே
காதலின் வலிமை!
சுலோகமும் சிற்பமும்
இணைந்தால் அது
தெய்வத்தின் சந்நிதியாகும்!

உன் பெயரும், உன் உருவமுமே
எனக்கு
சுலோகமும், சிற்பமுமாகும்
நீயே என் சந்நிதியாவாய்...

எழுதியவர் : Premi (26-May-11, 12:53 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 316

மேலே