என் காதலியே
நீ எத்தனை முறை அழுதிருப்பாய் அப்போது
கணக்கில் இல்லை.
என்ன செய்ய முடியும் என்னால்
கல்லூரியில் 3 ம் ஆண்டு படிக்கும்
என்னால் என்ன செய்ய முடியும் ?
நீ அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை
ஆதலால் தான்
உன்னை சந்திக்க விரும்பவில்லை
உன் அழுகுரல் கேட்க மனதில் தெம்பில்லை
ஆதலால் தான்
உன் அலை வழி அழைப்பை ஏற்கவில்லை
நீயே சொல்
என்ன செய்ய முடியும் என்னால்
அலை பேசியை அணைத்தேன்
உன் தொந்தரவால் அல்ல
உன் அழுகுரல்
என்னை என் குடும்பத்திடமிருந்து பிரித்து விடுமோ
என்ற பயத்தினால்
நீயே சொல்
என்ன செய்ய முடியும் என்னால்
குடும்பத்தை இழக்க விரும்பா என்னால்
என்ன செய்ய முடியும்
அழுது அழுது ,
கண்கள் சிவந்து ,
குரல்கள் மங்கி
மனத்தை தேற்றி
ஒரு முடிவு செய்தேன்
ஓயாமல் ஒலித்த
உன் அழைப்பின் பச்சை பொத்தானை
அழுத்த எத்தனித்தேன்
சொல் என்றேன் ,
என்னை போல் உனக்கும் சொல்ல
வார்த்தை இல்லை போலும்
அழுகையை வார்த்தையாக்கினாய்
என்ன செய்வது
பேசாமலே இருவரின்
எண்ணங்களும் பரிமாறிய பின்
வார்த்தைகள் எதற்கு ?
நீ பெண் அழுதுவிட்டாய் ,
நான் ஆண் அழுவது நன்றோ ?
முடிவு வேண்டுமே எதற்கும் ..
முடிவெடுத்தேன் .
சற்று தேரினேன் ,
தெம்பேற்றினேன்
காரணம் கூறாமல்
கல்யாணம் செய்ய இயலாது என்றேன்
நீயே சொல்
என்ன செய்ய முடியும் என்னால்
சூழ்நிலை கைதியான என்னால்
என்ன செய்ய முடியும்
அப்போதும்
என் மனம் நோக கூடாதென்றெண்ணி
மறுத்த பேசாமலே அழுதாய்
தீர்கமாய் சொன்னேன்
வயதில்லை பணமில்லை
அடி வாங்கி உன்னை அழைத்துச்செல்ல
உடலில் மனதில் தெம்பில்லை
அதற்கும் பதில்
அழுகை தான் தந்தாய்
என் இயலாமையை எண்ணி நொந்தேன்
நோவதை தவிர
வேறன்ன இயலும் என்னால்
என் , உன் நலம் கருதி
உன் தந்தை சொல் கேள் என்றேன்
உன் அழுகுரல்
என் முடிவை மாற்றிவிடும் என்றெண்ணி
அணைத்தேன் அலை பேசி அழைப்பை
உன் அழுகுரல் ஓய்ந்தது
என் காதில் ,
ஆரம்பித்தது
என் மனதில் ..
ஓயாத உன் அழைப்பு தொடர்ந்தது
துண்டித்து பார்த்தேன் ,
உன் அழைப்பை துண்டிக்க முடிந்ததே தவிர
உன்னை துண்டிக்க மனம் வரவில்லை
சில நாட்கள் தொடர்ந்தது உன் அழைப்பு
பின் நின்றது அழைப்பு
சில நாள் கழித்து அழைத்தாய்
சொல் என்றேன்
எனக்கு இந்த தேதியில் நிச்சயதார்த்தம்
துன்புறுவதா ,
மனம் மாறியதை எண்ணி மகிழ்வதா ?
தெரியவில்லை
ஆனால் நீ தெளிவாய் இருந்தாய்
உன்னில் ஒரு கோவம் தெரிந்தது
வரச்சொன்னாய்
வரவேண்டுமா என்றேன்
உன் இஷ்டம் என சொல்லி துண்டித்தாய்
எப்படி முடியும்
நான் இருக்க வேண்டிய இடத்தில்
இன்னொரு மனிதன்
நினைக்க நினைக்க ஜுவாலை எரிகிறது
மனதில் .
மற்றொரு நாள் அழைத்தாய்
வருவாய் என நினைத்தேன் என்றாய்
மன்னித்து கொள்
தொடர்பு துண்டித்தாய்
அடுத்த முறை திருமணத்திற்கு அழைப்பு விடுத்தாய்
எப்படி வருவேன்
ஆனாலும் அழைத்தாய்
வர எண்ணினேன் .
வாய்ப்புகள் இருந்தும் நிராகரித்தேன்
அத்தோடு முடிந்தது நம் உறவு
இப்போது
மகிழ்வோடு இருப்பதாய் சொன்னாயே
அது போதும்...
தயவு செய்து
உன் குழந்தைக்கு
என் பெயரை வைத்து விடாதே...