ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - ஒருவர் பிறருடன் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஏனெனில் அவருக்குப் பிறர் உதவி எப்போதும் கிடைக்கும். மற்றவர்களிடம் ஒற்றுமையில்லாதவருக்கு யாரும் உதவ மாட்டார்கள். இந்தப் பழமொழியை நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் பொழுது பால கங்காதர திலகர் ஆங்கிலத்தில் "United, we stand.. Divided, we fall" என்ற கோஷத்தால் உருவாக்கினார். இதை மஹா கவி பாரதியார் "வந்தே மாதரம்" என்ற தம் கவிதையில், "ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே" என்று குறிப்பிட்டுள்ளார். கோடிக்கணக்கான இந்திய மக்கள் மஹாத்மா காந்தி போன்ற தலைவருடன் ஒத்துழைத்துப் போராடியதால் தான் நம் நாடு வெள்ளையரிடம் அடிமைப்பட்டிருந்த நிலைமை மாறி நாம் சுதந்திர இந்தியாவில் இன்று வாழ்கிறோம்.

அதேபோல் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - பலர் ஒன்று கூடி வாழ்ந்தால் நிறைய நன்மைகள் உண்டு பல விவசாயிகள் ஒன்று கூடி வயலில் உழைப்பதால் தான் கனியும் கிழந்தும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடாக இந்தியா விளங்குகிறது, அனைவருக்கும் உணவு கிடைக்கிறது. கோவில்களில் தேர்த்திருவிழா நிகழும் போது ஊர் மக்கள் ஒன்று கூடிக் கயிறு கொண்டு இழுத்தால் தான் தேர் வீதிகளில் உலா வர முடியும். இதைத் தான் ஊர் கூடித் தேர் இழுத்தல் என்பர்.

அம்மா இங்கே வா, வா, ஆசை முத்தம் தா, தா
இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார், ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை, ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன், ஒற்றுமை என்றும் பலமாம்,
ஓதும் செயலே நலமாம், ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

என்ற குழந்தைகளுக்கான பாடலிலும் ஒற்றுமையின் வலிமை உரைக்கப் பட்டுள்ளது.

எழுதியவர் : (8-Sep-15, 11:43 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 19810

சிறந்த கட்டுரைகள்

மேலே