தேரா மன்னா செப்புவது உடையேம்
தொடர் வண்டிப் பயணங்கள் எனக்கு
தொல்லை தரும் தருணங்கள் -பல்வகை
இடர் வந்து என்னை மொய்க்கும்
இடம் அதிலே இன்னலே வாய்க்கும்.!!
இடம் இது எனக்கானது என்று
இருக்கை அதனைக் கண்டு பிடித்தால்
அடம் பிடித்து அதிலோர் அம்மணி
அப்பால் அமரச் சொல்வார் குழைந்து.!.
சன்னலின் ஓரம் சாய்ந்து இருந்திட
என்னவள் தனது இடத்தை அளிப்பாள்;
சிறுமி ஒருத்தி சிரிப்பை உதிர்த்து
சட்டமாய் வந்தங்கு அமர்ந்திடுவாள்.
”குழந்தை பாவம்” என்று விட்டோமெனில்
குறுகிய காலத்தில் அவளெழுந்து ஓட
குட்டைப் பாவாடையில் குமரி ஒருத்தி
குறுநகை செய்து வந்து அமர்வாள்!
சின்ன வயதுடை பெரிய பெண்ணவளின்
சென்னி கிழவனின் தோளில் சாய்கையில்
“என்ன இது” வென்று கண்ணால் கேட்டு
கண்ணகி ஆவாள் என்னை எரித்திட!
நிலவின் ஒளியில் நித்திரை செய்யும்
களமாய் காடும் கழனியும் மலையும்
கலைந்த கனவாய் கண்ணுக் கெட்டாமல்
பின்னோக்கி ஓடிடும் நினைவுத் துகளாய்!!
மெல்ல ஒதுங்கி மேனியைக் குறுக்கி
உச்சிக்கு ஏகி உடலைக் கிடத்திட
“பல்லி போலொட்டி ஒருபால் படுங்கள்
சொல்லி விட்டேன் குறட்டையை குறையுங்கள்”
“எல்லா மனிதரும் என்னைப் பார்த்து
சிரிக்கும் விதமாய் செய்து விடாதீர்!
கல்லா மாந்தரைப் போலவே நீரும்
உறக்கம் பெரிதென இருந்து விடாதீர்”
காலையில் விழித்து, கைச்சுமை சுமந்து
சாலைகள் கடந்து வீடு வரும்வரை
ஒன்றுமே நடக்காதது போலே பசுங்
கன்றுக் குட்டியாய் பின்னால் வருவாள்
“தேரா மன்னா செப்புவது உடையேம்
நீயே கள்வன்! நீயே காமுகன்!!
கண்களால் கன்னிப் பெண்டிர்க்குக் கன்னி
விரித்திடும் நீயே வித்தாரக் கள்ளன்.”
“கவட்டைக்கு இடையில் இருப்பதோ கற்பு
கண்களால் புணரும் காமம் விபச்சாரம்!
கண்ணிறை கணவன் கட்டியவள் முன்னே
கனவு மோகத்தில் மிதப்பது அபச்சாரம்.!”
தொடர் வண்டிப் பயணங்கள் எனக்கு
தொல்லை தரும் தருணங்கள் -பல்வகை
இடர் வந்து என்னை மொய்க்கும்
இடம் அதிலே இன்னலே வாய்க்கும்.!