வாசிப்பு
படித்த புத்தகங்களின் பெயர்களைச் சொல்லி
பயமுறுத்தும் புத்திஜீவி வகையல்ல நான் !
உயர்நிலை பள்ளியில் தொடங்கிய நூலகப் பழக்கம் !
அம்புலிமாமாவிடமிருந்து விடுபட்ட நான் -
குமுதம் விகடன் தொடர்கதைகளுக்குள் தொலைந்து போனேன் !
முள்முனையில் அலைக்கழித்தது தினத்தந்தியின் சிந்துபாத் தொடர் !
மெல்ல என் மனதில் எட்டிப் பார்த்தன கணையாழியும் அமுதசுரபியும் !
கொஞ்சம் இந்தியாவைத் தாண்டியும் யோசிக்க வைத்தது -
தபாலில் வந்த சோவியத் யூனியனின் வழவழப்பு காகிதம் !
பொன்னியின் செல்வனும் கடல்புறாவும் சித்திரப் பாவையும் -
வார இதழ்களின் பக்கங்களால் பவுண்டு செய்யப் பட்டு -
அன்று எங்கள் இதயத்தில் தைக்கப் பட்டன !
வாசிக்கும் போதையை நிறையவே ஊட்டியது
மலிவு விலையில் ராணிமுத்து !
தகழியையும்
காண்டேகரையும்
தமிழில் வாசித்தேன் !
எழுபதுகளின் இறுதிகளில் தொடங்கி -
இடதோ வலதோ திராவிடமோ தேசியமோ-
அனைத்து இளைஞர்களையும் ஒருங்கே ஈர்த்தார்
சுஜாதா என்னும் அற்புதப் படைப்பாளி.!
ஜெப்ரி ஆர்ச்சரை நெஞ்சிலேற்றிய கல்லூரி இளைஞிகள்
ஜீனோவையும் கணேஷ் வசந்தையும் சுமந்தனர்.!
கம்ப்யூட்டர் எனும் வரப் போகும் புரட்சிக்கு
தயார் ஆனார்கள் இலக்கிய இளைஞர்களும் !
இன்று-
உலகக் கவிதைகளை
மின்னூலில் வாசிக்கும்
இளம்தலைமுறை !
தட்டச்சு செய்யப்படும்
கணினியில் கவிதைகள் !
ஆனாலும்-
புத்தகக் கண்காட்சிகளின்
திரண்டு வரும் வாசகர் கூட்டம்
ஆறுதல்தான் -
வாசிப்புப் பழக்கம்
இனியும் உயிரோடு இருக்கிறது !