காலச் சக்கரம் பின்னோக்கி

இருபத்து ஐந்தாண்டுகள்
காலச் சக்கரத்தினை பின்னோக்கிச் செலுத்துகிறேன்

கரும்பலகை, புத்தகம்,
கயல்விழி என வகுப்பறைக்குள்
என் முக்கோணப் பரிமாணச் சுவடுகளை அடையாளம் காணமுடிகிறது

துருவேறிய ஆணியின்
கூர்மையற்ற முனைகள்
கயலுக்காக மீனையும்
விழிக்காக கண்ணையும்
பூவரசு மரமொன்றில்
ஆழ வரைகிறது

நுலகத்தில்,அவள் வருகைக்காக
நான் வாசல் பாா்த்துக் கிடக்க...
திறந்து கிடக்கும் புத்தகத்தின் பக்கங்களை
மின் விசிறி புறட்டிப் புறட்டிப் படிக்கிறது

பேரூந்து இருக்கையின்
இடைவெளியாகப் பின்னோக்கிப் படரும்
ஒரு கற்றைக் கூந்தலிடம்
என் காதல் சொல்லிப் பழகும்
காட்சியும் விரிகிறது

கல்லூரி இறுதி நாளின்
வலிகளுக்குள் மட்டும்
காலச் சக்கரத்தின்
எள் முனையைக் கூட
என்னால் அனுமதிக்க முடியாது...

எழுதியவர் : புதிய கோடங்கி (16-Sep-15, 2:19 pm)
பார்வை : 104

மேலே