பார்த்து போ மகளே

பார்த்து போ மகளே!..
அழகி நீ என ஆணவம் கொள்ளாமல்
பார்த்து போ மகளே!.
பஞ்சுமிட்டாய் நீயென்று
பார்வைகள் பல பதுங்கியிருக்கும்.
படித்தவள் நீ என்று கர்வம் கொள்ளாமல்
பார்த்து போ மகளே!.
பழிவாங்க பாதை முழுக்க
பாசறைகள் காத்திருக்கும்
அலங்காரம் கொண்டு அகங்காரம் கொள்ளாமல்
பார்த்து போ மகளே!.
விலை பேசும் சமுதாயம்
வலை வீசி நின்றிருக்கும்
சுற்றங்கள் வெறுத்து பகடி பேசாமல்
பார்த்து போ மகளே!.
வாழ்க்கை வட்டம் என்பது
சீக்கிரம் புலப்பட்டுவிடும்
யட்சன் யாரென்று யாசகம் கொள்ளாமல்
பார்த்து போ மகளே!.
துட்சன் வேடத்தில்
துயரங்கள் தோன்றிருக்கும்
விமரிசை செய்து புகழ்ச்சி தேடாமல்
பார்த்து போ மகளே!.
வீழ்ந்தால் தூற்றுவதற்கு
பலர் நாவானது துடித்திருக்கும்
தகப்பன் இவன் சொல் தட்டாமல்
பார்த்து போ மகளே!.
உள்ளிருந்து உணரும் தருணம்
இவண் யாரென்று தெரிந்திருக்கும்