ஆசை படுதலை பற்றி நமது மதம் என்ன சொல்கிறது
ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று சொன்ன அக்காலத்து ஞானிகளுக்கும், அனைத்திற்கும் ஆசைப்படு என்று சொல்லும் இக்காலத்தை சேர்ந்த துறவிகளுக்கும் என்ன? வித்யாசம் என்று என்னை ஒரு நண்பர் இப்பொழுது கேட்டார்.
இதே கேள்வியை பலர் கேட்டு விட்டனர். நானும் அலுக்காமல் பதில் சொல்லி கொண்டு இருக்கிறேன். உண்மையில் நமது ஹிந்து மதம் நியாயமான விடயங்களுக்கு கூட ஆசைப்படுவது தவறு என்று சொல்கிறதா. ஹிந்து மதத்தில் இரண்டு பெரும் பிரிவுகாளான சைவமும், வைணவமும் ஆசை பற்றி என்ன? சொல்கிறது.
நாவுக்கரசர்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறார்.
தொண்டரடி பொடி ஆழ்வார்
பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !
என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆசையை துறக்க வேண்டும் என்று நினைப்பதும் ஒருவித ஆசை தான்.
இறைவனின் அருளை நாம் அடைய வேண்டும் என்று நினைப்பதும் ஒருவித ஆசைதான். ஒரு மனிதனுடைய நியாயமான
ஆசைகள் இஷ்ட்ட, காமியார்தங்கள் நிறைவேற வேத மந்திரங்கள், ஸ்லோகங்கள் இருக்கிறது. ஆசைப்படுவது தவறாக
இருந்தால் நமது முன்னோர்கள் அதை நிறைவேற்ற எதற்கு?
இவற்றையெல்லாம் ஏற்படுத்த வேண்டும். நம்முடைய ஆசை நியாயமான ஆசையாக இருக்க வேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் முது மொழிக்கு ஏற்ப்ப நான் உலகிலேயே No1 கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் தவறு இல்லை. அதற்கான சரியான திட்டமிடலை, நியாயமான வழிமுறைகளை பின்பற்றி செய்ய வேண்டும். கோவில் கட்டுவதாக இருந்தாலும்,காந்திக்கு மண்டபம் கட்டுவதாக இருந்தாலும் பணம் இல்லாமல் முடியாது.
இந்த பணம் பற்றி ராமகிருஷ்ண பரம ஹம்சர் சொல்வது. கப்பலை சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்துள்ள கடல் நீர் அளவு கூட
உன்னிடம் பணம் இருக்கலாம்.
ஆனால்?உன்னை சுற்றி உள்ள பணம் உன் மனதினுள் புகாமல் நீ பார்த்து கொள்ள
வேண்டும். உன்னுள் பணம். அதாவது பணத்திமிர் புகுந்தால் ஓட்டை கப்பல் மூழ்குவதை போல் உன் வாழ்க்கை
மூழ்கி விடும்.
என்ன? அழகான விளக்கம் பாருங்கள்.
அனைத்து நியாயமான விடயங்களுக்கும் ஆசைபடுங்கள். தவறே இல்லை.