கவலையை மறக்க சில வழிகள்

நம் அன்றாட வாழ்க்கைப் போராட்டமும் சவாலும் மிகுந்ததாக மாறிவிட்டது. பல வித குழப்பங்களுக்கும் வேதனைகளுக்கும் மனம் அடிமையாகி, கவலைக் குழியில் முற்றாக விழுந்து விடுகிறது. இதிலிருந்து மீள மருத்துவ ரீதியாகவும் ஆன்மிக முறையாவும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

உடற்பயிற்சி

நம்மனக் கவலையைப் போக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த மருந்தாகும். நம் உடலுக்குப் போதிய அளவு அசைவுகள் ஏற்படும் பட்சத்தில், எண்டோர்பின் எனப்படும் அமிலம் சுரக்கப்படுகிறது. இந்த வகை அமிலமானது நம் வேதனைகள், கவலைகள் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க வல்லது. அது மட்டுமின்றி, உடற்பயிற்சியில் ஈடுப்படுகையில் நம் மனம் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கின்றது. இதனால் பல எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிலிருந்து நீங்க வழிச் செய்கிறது. தனியாக வீட்டில் உடற்பயிற்சி செய்வதை விட, பூங்கா, கடற்கரை போன்ற இயற்கை தவழும் இடங்களில் மற்றும் பலர் ஒன்று கூடும் இடங்களில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு எழுதுதல்

நம் மனக் குறைப்பாடுகளை ஒரு தாளில் எழுத்துப் பூர்வமாக வெளியிடும் பொழுது, நம் மனம் அமைதியடைவதை உணரலாம். நம்மை ஆட்டிப் படைக்கும் உணர்வுகளை ஒழிவு மறைவு இன்றி அப்படியே எழுதும் பொழுது, நம் எண்ணங்கள் ஒரு நிலைப் படுகின்றன. இதனால் நம் பிரச்சனை ஒரு சாதாரண விஷயமாகத் தோண்ற ஆரம்பிப்பதோடு, அதற்கான தீர்வும் கிடைக்க சாத்தியமுண்டு. தனது மன உளைச்சலைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு இந்த வழிக் கைக் கொடுக்கும்.

மனம் விட்டு உரையாடுதல்

நம் மனக் கஷ்டங்களை நமக்கு நம்பிக்கையான ஒருவருடன் கலந்துரையாடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். இதற்காகவே பயிற்சிப் பெற்ற ஆலோசகர்களின் சேவையையும் நாடலாம். மன நல ஆலோசகர்களோடோ அல்லது நண்பர்களோடோ உரையாடும் பொழுது அவர்கள் வழியில் தீர்வு பிறக்கலாம். நமக்குண்டான அதே பிரச்சனையைக் கடந்து வந்தவரிடம் உரையாடுகையில் அவர்களின் அனுபவப் பூர்வமான ஆலோசனையை நம்பி பின்பற்றலாம்.

தன்னார்வப் பணிகளில் ஈடுபடுதல்

நமது மனக் கவலைகளிலிருந்து விடுபட பிறருக்கு உதவி செய்தல் மற்றுமொரு நல்ல வழியாகக் கூறப்படுகிறது. மற்றவர்களுக்கு உதவுகையில் நாம் அவர்களைவிடப் பல வகையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை மனப் பூர்வமாக உணர்ந்துக் கொள்ளலாம். ஒருவர் தன் ஒரு வருடக் காலக்கட்டத்தில் 100 மணி நேரங்களுக்குக் குறைவாகத் தன்னார்வ பணிகளில் ஈடுபடுதல் மன உளைச்சலைக் கட்டுபடுத்துமென ஆய்வுகள் கூறுகின்றன. உதவி என்பது பணம் சம்பந்தப்பட்டதல்ல; அது மனம் சம்பந்தப்பட்டது. சற்று நேரம் ஒதுக்கி, முதியோர் இல்லத்தைச் சுத்தம் செய்வது, அன்பு இல்லக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுதல் மன உற்சாகத்துக்கு வித்திடும். இதைத் தவிர, நீங்கள் விலங்குப் பிரியராக இருப்பின், விலங்குகள் காப்பகத்தில் சேவைச் செயயலாம்.

தியானத்தில் ஈடுபடுதல்

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற பொக்கிஷங்களில் ஒன்றுதான் தியானமும் யோகாசனமும். தியானத்தில் முழுமையாக மனதை ஈடுபடச் செய்கையில், மனம் தானாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது. நமக்கு விருப்பமான, நம்மை உற்சாகப்படுத்தும் மந்திரங்கள் அல்லது சுலோகங்களை மனதில் ஓடவிட்டுக் கொண்டே இருக்கலாம். மனம் உற்சாகம் அடைகையில் பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நமக்கான பாதுகாப்பு வலையை உருவாக்கிக் கொள்ளலாம்.

புதுமையானக் காரியங்களில் ஈடுப்படுதல்

புதுமையான விஷயங்களில் மனதைத் திசைத் திருப்புதல் நம் பிரச்சனையை மறக்கச் செய்யும் மருந்தாகும். இசையமைத்தல், கவிதை எழுதல், ஓவியம் வரைதல் போன்றவை நம் கற்பனைச் சக்தியை மேலோங்கச் செய்வதோடு புதுமையை உருவாக்கும். நம் உணர்வுகள் அனைத்தும் கற்பனை வடிவில் வெளியாகும் பொழுது, மனம் அமைதியடைவதை அனுபவிக்க முடியும்.

இறை வழிப்பாடு

அவனின்றி ஓரணுவும் அசையாது. மனித அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று இருக்கிறது என்பதே நமது மனதுக்குத் தெம்பளிக்கும் உண்மை. நம் மன பாரங்களை இறைவனை எண்ணி, அவன் பாதங்களில் கொட்டி விட்டால் மன நிம்மதிப் பெறலாம். பிரச்சனைக்கானத் தீர்வுக்கு இறைவன் வழிக்காட்டுவார் என்ற பதிய நம்பிக்கையோடு வாழத் தொடங்கலாம்.

நினைவுக் கூறுதல்

ஒரு காலக்கட்டத்தில், நம் மன நிம்மதியைச் சீர் குழைக்கும் பிரச்சனையை நினைவுக் கூர்ந்துப் பார்த்தல் அவசியம். அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து, பிரச்சனைக்கான காரணங்களை நினைவுக் கூர்ந்துப் பார்க்க வேண்டும். காரணங்களைக் கண்டறியும் பொழுது, அதற்கான தீர்வுப் பிறக்க வாய்ப்புண்டு. தீர்வுக்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைப் பற்றி யோசிக்காமல் இருத்தல் நல்லது.

சிந்தனையைத் திசைத் திருப்புதல்

நம் பிரச்சனைக்கான சிந்தனையிலிருந்து விடுபட எப்பொழுதும் ஏதாவது செய்துக் கொண்டிருத்தல் அவசியம். திரைப் படம் பார்த்தல், புத்தம் வாசித்தல் போன்ற நன்மையளிக்கும் பல விஷயங்களில் கவனம் செலுத்தும் பொழுது நம் பிரச்சனைக்கான எண்ணங்களிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம். நகைச்சுவை நிறைந்த காட்சிகளைப் பார்ப்பதும் நல்ல பலனைத் தரும்.

நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலமே மருந்து என்பார்கள். பிரச்சனையைச் சற்று ஆறப் போட்டால் அதற்கான தீர்வு பிறக்க ஆரம்பிக்கும் என்பதில் ஐய்யமில்லை.


Posted by Rajeswari M on December 3, 2014 in கட்டுரை

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 10:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 2291

மேலே