ஒரு துளி பயணம்
ஒரு துளி மழைநீர்
தெரியாமல் தவறி விழுந்தது
வழியில் எல்லாம்
பயந்து கொண்டே பயணம்..
கடலில் விழுந்து காணாமல் போவேனோ?
ஆற்றில் விழுந்து அடித்துக்கொண்டு போவேனோ?
மலையில் விழுந்து அடிபட்டு வீழ்வேனோ?
நெருப்பில் விழுந்து உயிரைவிட்டு விடுவேனோ?
நிலத்தில் விழுந்து மண்ணுக்கடியில் மறைவேனோ?
இன்னும் சற்று தூரம் தான்
பயணத்தின் எல்லையும்
பயத்தின் தொல்லையும்..
சற்று கீழே மழலை மழையில்
விளையாடிக் கொண்டிருந்தது..
மன நிறைவுடன்
மழலையின் கையில் விழுந்தது தற்கொலை செய்ய..
கையை தட்டி விளையாடியதில்
தவறி வேரில் விழுந்தது அந்த துளி..
மரம் பூத்ததில் தேன் துளியானது அந்த துளி..
ஆகாயத்தை பார்த்து பல் இளித்தது அந்த துளி..
அதிர்ஷ்டம் அரை மணித்துளி கூட இல்லை..
பட்டென்று வந்த தேனீ சட்டென்று கவ்விச் சென்றது..
வானில் பிரிந்த துளிகளெல்லாம்
கூட்டில் கூட்டானது...
கூட்டிற்க்குள் புகை..
கூடு காலியானது..
துளிகளெல்லாம் பாட்டிலில் நிரம்பியது...
வீட்டில் யாருமில்லா நேரத்தில்
ஒரு துளி தேனை ஆசையாய்
தொட்டு நக்கியது அந்த மழலை...!