இதயத் தாழ் எனக்காக திறக்கட்டும்

அடிப்பெண்ணே…
சந்திர வதனத்தில்
ஜனித்தவளோ நீ?
உன் முகம் பார்த்த
மஞ்சல் செடியெல்லாம்
வெட்கித் தலைகுனிகிறதே...

தயவு செய்து உந்தன்
கார்குழல் கலையாதே
தாகம் தீர்க்க வந்த
மேகங்கள் கலைந்து
தாறுமாறாய் வேறெங்கோ
தப்பித்து ஓடுகிறது!

மொழிபிறை நெற்றியில்
பொழியும் செந்தூர பொட்டால்
அந்திநேர செவ்வானம்
அக்கம் பக்கம் பார்த்தபடி
அதிவேகமாய்
அடிவானுள் மறைகிறது!

இதழ்கள் திறந்து
ஏது படித்தாய் நீ
கூவும் குயில்களின்
குரலோசை கேட்கவில்லை!-தன்
குரல்வலை அறுத்து- தற்
கொலை கொண்டதா ? இல்லை
நாடுவிட்டு நாடு
நகர்ந்து விட்டதா?
வசந்தமே.- நீ
வாய் திறவாதே!
வாழட்டும் அந்த
வானிசை புள்ளினம்!

நீ
நீராட வேண்டி
நீரோடை பக்கம் போகாதே!
தாவித் திரிந்த மீன்களெல்லாம்
தேவியுன் விழிகள் கண்டு
அடியாழம் தொட்டு
அமைதி கொள்கிறது!
உந்தன்
மிளிரும் மீன்விழிதனை
மெல்லிய இமையிழுத்து
மெல்ல மூடு!
அல்லால்-
அங்கம் அவ்விடம்விட்டு
அகன்றாலன்றி
அந்த
மீன்படைகள்
மீண்டும் வெளியில் வாரா.

இன்றுவரை
ஆழி வேடவருக்கெல்லாம்
அகப்படாத அதிசயம்
உன் வெண்சங்கு கழுத்து!
மன்னர் காலத்தில் –உன்
அன்னை அடிமடி திறக்கவில்லை..
அம்மடி நீ பூத்திருந்தால்
அக்கணமே
உலகாண்ட
ஒட்டுமொத்த அரசர்களும்
ஒன்றுகூடி
என்னாடு உதித்த
பொன்மகளே நீதான்
ஏழேழு உலகிற்கும்
ஒரே ராணியென
உரக்க ஒலியெழுப்பி
உன்நாமம் உச்சிரித்து
மகிடம் சூட்டி மகிழ்ந்திருப்பர்!
வார்முரசு கொட்டி
வையத்தில் வாழ்வோரை
வாழ்த்துக் கூற அழைத்திருப்பர்!

உன்
பருவ எழில் சுமந்து
நறுமணம் வீசும்
நந்தவ பக்கம் போகாதே…
சூரிய வெப்பத்தால்
சுகந்த மலர்கள்
சூம்புதல் இயல்பு! ஆனால்
கச்சிதமாய்
கச்சைக்குள் இருக்கும்
உன்னிரு
மலர்க் கணைகள் கண்டு
சோலைவன மலர்கள்
சூம்பியதை என்ன சொல்ல?

நீ
நட்ட முல்லைச் செடியில்
மொட்டு மலர்ந்த்து கண்டு
தொட்டுப் பறிக்க செல்லாதே …

நூலினும் மெல்லிய
உந்தன்
சிற்றிடை கண்ட
கொடி முல்லை
அடியோடு வேரறுந்து விழும்!

ஆம் பெண்ணே
பெரும் புயலையும்
தாங்கி நின்ற
தோட்டத்து மலர்க் கொடிகள்
சிற்றாடை தாங்கி நிற்கும்
உந்தன்
சிற்றிடை கண்டு
தன்னைத் தானே
தண்டித்துக்கொள்ளும்…
வேண்டாம் அந்த
பாவச் செயல் உனக்கு…
சற்று தள்ளி நில்
அத்தளிர்கள் தழைக்கட்டும்!

மதிமுகத்தாளே..!
மார்கழித் திங்கள்
அதிகாலை நீராட
அன்ன நடையிட்டு
தாமரை நிறைந்த
தடாகம் சென்று
ஆடை தளர்த்தி
உடல் அலம்ப
நீருக்குள் நீந்தாதே
உன்
பின்னெழில் காணும்
தாமரை மொட்டுக்கள்
தண்ணிரீருள் மூழ்கிவிடும்!

கன்னி நீ
வருங்கால
கணவனுக்கு காத்துவைத்த
சீர்மிகு சீதனம் –
அந்த அடிமடி
அந்தரங்கம்!
சிற்றின்பம் தருமந்த
சிருங்கார சின்னத்தை
அடையாளம் கண்டு
அவசர அவசரமாய்
குஞ்சு மீன்கள்
கொஞ்சிமகிழ கூடிவரும்
சத்தியமா சத்தமின்றி
முத்தமிட முன்னேறும்
கைகள் கொண்டு
காத்துக் கொள்!- இல்லை
கலகம் விளையுமுன்னே
கரைசேர் விரைந்து!

பாவின் தொடையழகு
படிப்பதற்கு இனிமை தரும்!
பாவையுன் தொடையழகு
பார்த்த அக்கணமே
பசுவாழை மரங்கள்
பட்டுப்போகும்..!
படர்ந்து உயர்ந்த
கல்மூங்கில்களும்
கன்னிப்போகும்!

நீ
பஞ்சணையில் பாதம் வைத்து
பள்ளி கொள்ளாதே
பாவம் அந்த
வெண்பஞ்சு பொதிகள்…
நிகரற்ற மென்பாதம் உணர்ந்து
நிர்மூலம் தேடியோடும்!

பேரழகுப் பெட்டகமே..!
உயிரை படைக்கும் இறைவன்
உன்னை படைக்கையில்
ஓர்நாழி உறங்கிவிட்டான்..
இல்லையேல்
உலகின்
ஒட்டுமொத்த அழகெல்லாம்
உனக்கு மட்டுமே
உச்சி முதல்
உன்(னுள்) பாதம் வரை
அள்ளி அள்ளித் தந்திருப்பானா?

ஏந்திழையே..!
என்னுள்ளத்தில்
எழுந்த ஏக்கம்
உன்னுள்ளத்தை
தட்டி எழுப்பட்டும்!
இதயத் தாழ்
எனக்காக திறக்கட்டும்!
நம்
இல்லற இலக்கணம்
ஏவுகணைபோல் சிறக்கட்டும்!

எழுதியவர் : அ. க. செந்தில் குமார் (26-Oct-15, 10:01 pm)
பார்வை : 165

மேலே