இருபது வயது
காற்றில் கரைத்துக்
காண்கின்ற கனவுகள்..!
கதிர்மழையின் கதகதப்பில்
கால் நனைக்கின்ற
கஷ்டங்கள்..!
பரபரப்பில் பறந்தோடும்
பரவச உணர்வுகள்..!
பழகிப்போன பசுமையில்
பசியாற்றிக்கொள்ளும்
பல்லாங்குழிப் பார்வைகள்..!
இடியைத் தாங்கிக் கொள்ளும்
இனிமையான இதயத்தின்
இளமைத் தவிப்புகள்..!
இருக்கின்ற ஒன்றிற்காகவும்...
இல்லாத ஒன்றிற்காகவும்...
இடம்மாறித் துடிக்கின்ற இம்சைகள்..!
எப்படியும் முன்னேறிவிடலாமென
எண்ணங்களின் எழுச்சிக்கு
எரிதழல் ஏற்றிப் பிடிக்கின்ற
ஏக்கங்கள்..!
இத்தனை இன்னல்களையும் கடந்து
எதிர்கால எரிமலையை
எட்டித்தாண்டி - எனக்கான
இடத்தைபிடிக்க எண்ணுகிறது
இருபது வயது..!