காதல் வலிகள்

விழியென்ற கரங்களிலே இதயத்தை வருடுகிறாள்
அழியாத நினைவுகளாய் எனக்குள்ளே நெருடுகிறாள்
கழிக்கின்ற பொழுதுகளோ கன்னியவள் வடிவாகி
எழிலான கவிதைகளை எனக்குள்ளே தந்துசெல்லும்

இமை மூடித்துயிலத்தான் மனம் நினைக்கும்
சுமை விழியின் நினைவினிலே எல்லாமே மறந்துவிடும்
இமை மூடா அற்புதங்கள் அவளிடமே பிறந்துவரும்
சுமை கூட அவள் நினைவில் சுமையான சுகமாகும்

கனவினிலே பொன்மலராய் பவனி வரும் நேரத்திலே
மனதினிலே எண்ணங்கள் மலராகி மணம் பரப்பும்.
நனவினிலே நகைப்புடனே நடந்துவரும் வேளையிலே
புனலெழுந்த பூவொன்று புதுப்பெண்ணாய் நடந்துவரும்.

தனிமையிலே பிரிந்திருந்தால் தவிப்புகளே பரிசாகும்
தனிமயிலாள் வந்துவிட்டால் தவிப்பெங்கோ பறந்தோடும்.
இனிமையிலே நெஞ்சமெல்லாம் சுகம் விளையும்
இனி மயிலே நாணமென்ன ? மனம் கேட்கும்.

அடிக்கின்ற குளிர்காற்று இன்பமதைத் தந்துசெல்ல
துடிக்கின்ற அனல்காற்றோ துன்பம் தனை வெளிப்படுத்தும்.
படிக்கின்ற புத்தகமாய் அவள் நினைவைக் கையிருத்தி
நடிக்கின்ற நாடகத்தை மின்னல் வந்து படம் பிடிக்கும்.

அலைமகளைக் கூந்தலிலே அவள் இருத்தி
மலைமகளின் முகப்பொலிவாய் அவள் ஒருத்தி.
கலைமகளின் குணம் கொண்டு கவிதை தரும்
சிலை மகளின் சொல் உருவில் நான் வாழ்வேன்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (30-Oct-15, 11:59 pm)
Tanglish : kaadhal valikal
பார்வை : 185

மேலே