உழவன் குரல்

உழவன் குரல்

உழவன் என்னைத் தெரிகிறதா?--என்றன்
உண்மை நிலைமை புரிகிறதா?
உழவன் உலகின் ஆணியென--அய்யன்
உரைத்ததும் நினைவில் வருகிறதா?

மண்ணை உழுது பயிராக்கிப்--பயிரின்
மென்மை அசைவில் மகிழ்ந்திருப்பேன்;
மண்ணில் பசுமை மலர்வதையே--என்றன்
மனதுள் பார்த்துத் திளைத்திருப்பேன்.

ஆடும் பசும்பயிர் நாட்டியத்தில்--என்றன்
அங்கம் முழுதும் சிலிர்த்திருப்பேன்;
கூடும் மணிகள் சுமந்தாடும்--அந்தக்
கதிர்கள் அசைவில் மனமிழப்பேன்.

என்றன் உழைப்பே உலகத்தில்--மக்கள்
இயக்கத் துணையாம் எனமகிழ்வேன்;
என்றன் உழைப்பே உயர்ந்ததுதான்--ஆனால்
என்றன் வாழ்க்கை உயர்ந்ததுவா?

பொங்கல் என்னும் திருநாளில்--நெஞ்சம்
பூரிக் கின்ற பெருநாளில்
எங்கும் இன்பம் பொங்கிவரும்;--அந்த
இன்பம் எனக்கும் வந்திடுமா?

மண்ணில் பயிரை விளைத்திடுவோர்--இன்று
மறைந்து வருதல் பார்க்கின்றோம்;
மண்ணைக் கூறு போட்டிட்டே--புது
மனைகள் எழுவதைப் பார்க்கின்றோம்.

வயல்வெளி யெல்லாம் மனையிடமாய்--மாறி
வளர்ந்தே உயர்தல் பார்க்கின்றோம்;
வயல்வெளி மனைகள் ஆகிடலாம்;--அங்கே
வாழ்வார்க் குணவே விளைந்திடுமா?

என்சிறு மனதில் இவ்வாறே--நாளும்
எண்ணம் பலவாய்ப் படுத்திடுதே!
என்சிறு கவலை யிருட்டினையே--இங்கே
எந்தக் கதிர்வந் தோட்டிடுமோ?
---- ---- ---

எழுதியவர் : பொற்கிழிக் கவிஞர் சவகர்ல (31-Oct-15, 9:52 am)
பார்வை : 67

மேலே