வெடியில்லாத் தீபாவளி

வெடியில்லாத் தீபாவளி
பாவலர் கருமலைத்தமிழாழன்

வெடிப்பதனால் பெறுவதென்ன ! வெடிக்கும் சத்தம்
வேட்டுவைத்துக் காதுகளைச் செவிடாய் ஆக்கும்
வெடிகளினால் பணமெல்லாம் கரியாய்த் தீய்த்து
வெற்றார வாரத்தால் பலன்தான் உண்டோ
வெடிகளினைச் செய்கின்ற சிறுவ ரெல்லாம்
வேகின்றார் கந்தகத்தில் கல்வி தொலைத்தே
வெடிகளினைச் செயும்போதும் வெடிக்கும் போதும்
வேதனைதான் உயிர்பலியால் வேறென் கண்டோம் !

வெடிகளினை வாங்குகின்ற பணத்தைக் கொண்டு
வேறுநல்ல பணிகளினைச் செய்ய லாமே
படிப்பதற்கு வசதியற்ற ஏழை யர்க்கும்
பசியாலே துடிக்கின்ற ஏழை யர்க்கும்
உடுப்பதற்குத் துணியில்லா ஏழை யர்க்கும்
உறவில்லா அனாதையான குழந்தை கட்கும்
முடிந்தளவு அப்பணத்தைக் கொடுக்க லாமே
முன்னேற அவர்களுக்கு உதவ லாமே !

வீட்டினிலே தீபமேற்றி விரிந்த நெஞ்சால்
வீதியெல்லாம் மதம்மறந்து கைகள் கோர்ப்போம்
ஏட்டினிலே இருக்கின்ற மனித நேயம்
ஏந்திகையில் சாதிவிட்டே அணைப்போம் ஒன்றாய்
வேட்டுவைப்போம் மனத்தினிலே தீமை கட்கு
வேதனையில் பங்குகொண்டு மகிழ்வோம் சேர்ந்து
கூட்டாகத் தீபாவளித் திருநாள் தன்னைக்
குதுகலமாய் கொண்டாடி இன்பம் துய்ப்போம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (8-Nov-15, 5:08 am)
பார்வை : 321

மேலே