இளவரசியானேன் இருபத்தாறு மணி நேரம்
இளவரசியானேன் இருபத்தாறு மணி நேரம்...!!
அதன் மடியில் தஞ்சமடைந்த
காலை ஆறு மணியிலிருந்தே
அன்பான உபசரிப்பு
முன் பின் அறியாதவர்கள்தான்
ஆனாலும் உபசரிப்பில் குறைவில்லை..
ஃ பிளாஸ்கில் வெந்நீர், கோப்பை,
தூக்கில் தொங்கியபடி தேயிலைத் தூள்,
நீர்ம நிலையை தொலைத்திருந்த பால்
பொட்டலத்திற்குள் அடைபட்ட சர்க்கரை ..
என சிகப்பு நிறத்தட்டை நிறைத்து
என் அருகில் அவன் நீட்டியபோது
நான் சுகவாசியாகிப் போனேன்..!!
அத்தனையுமான சங்கமத்தில்
சுவையான தேநீர் அமர்ந்த இடத்திலலேயே
பருகியபோது சுகமாகத்தான் இருந்தது....!!
"டீ போட்டுட்டியா ஆத்திக் குடு.."
என்று மகளும்
"சர்க்கரையே பத்தலம்மா
இன்னும் கொஞ்சம் போடு"
என்று சமையலறைக்கு வந்து நிற்கும் மகனும்
"இவ ஒருத்தி எப்பவும் ஆறுன டீதான் குடுப்பா
சூடு பண்ணி குடு"
உடற்பயிற்சி முடித்துவிட்டு குடிக்கிறேன்
என்று சாவகாசமாய் டீயைக் குடிக்க வரும்
கணவரின் அங்கலாய்ப்பும்
காலையிலேயே ஒரு சோர்வினை தரும்
சூழலின் நினைவுகள் வந்து போக
சொர்க்கமாய்த்தான் தெரிந்தது
யாரோ ஒருவருடைய உபசரிப்பு...!!
அடுத்ததாய் ஒருவன்
"உங்களுக்கு சாப்பிட சைவ உணவா..??
இல்லை அசைவ உணவு வேண்டுமா..??"
கேட்டது கூட
கரிசனமாய்த்தான் தெரிந்தது
கனவா... இல்லை நனவா என்று
கிள்ளிப் பார்த்ததில் வலிக்கத்தான் செய்தது...!!
"அசைவம்" என்று நான் கூறியதை
அவன் குறிப்பெடுத்துகொண்ட சில மணித் துளிகளில்
அடுத்தடுத்த கவனிப்புகள்
சிம்மாசனம் இல்லா இளவரசியானேன்..!!
எட்டரை மணிக்கு முட்டை ஆம்லெட்டு
வறுத்தெடுத்த இரண்டு ரொட்டித் துண்டுகள்
தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ்..
முடித்தவுடம் மீண்டும் தேநீர் சகிதம்
தாம்பூலத்தில் சகல மரியாதைகளுடன்...!!
அடுத்தடுத்த கவனிப்புகளாய்
கறிக்குழம்புடன் மதிய உணவு...
நான்கு மணியளவில் சமோசா...
இரவு உணவோடு ஐஸ்க்ரீம் என்று
அமர்ந்த இடத்திலேயே
அத்தனை சவரட்சணைகளும்...
அந்த இருபத்து ஆறு மணி நேரமும்...!!
அடடா... அம்மாவைத்தவிர
யார் நம்மை இப்படி கவனித்திருக்ககூடும் ...??
"தில்லியில் பயிற்சிக்கு சென்றுவா" என்று
அனுப்பி வைத்த என் அலுவலகத்திற்கும்
பொறுப்புடன் எனக்கு சேவகம் புரிந்த
ராஜதானி அதி விரைவு ரயில் வண்டிக்கும்
நன்றி கூறிக் கொண்டிருக்கையில்
'நிஜாமுதீன் ரயில் நிலையம்"
என்கிற பெயர்ப்பலகை கண் முன் தோன்றி
"ராஜதானியின் சேவகம் இத்தோடு முடிந்துவிட்டது
இறங்கு" என்று கூறுவதைப் போலிருந்தது...!!
ராஜதானியை விட்டுப் பிரிகையில்,
இந்த உபசரிப்பு இனி எப்போது,,??
பெருமூச்சொன்றின் வெளியேற்றத்தில்
நெஞ்சம் கனக்கத்தான் செய்தது...!!