எனக்குள் நீயே

இன்றைய விடியலுக்காய்,
இரண்டு நாள் தவம் கிடந்தேன்..
மயக்கும் உன் குரல் கேட்க
மணிக்கணக்காய் தவித்திருந்தேன்..
இருளாகிக் கிடந்த வாழ்வில்
ஒளி ரேகையாய் வந்தவனே,
நீ இன்றி என் நாட்கள்
உதயத்தை நெருங்காது..!
உன் கடைக்கண் பார்வையில்
அழகாகும் என் நாட்கள்,
உன் ஒரு வார்த்தையில்
அர்த்தம் பெறும் என் உலகம்,
உன் ஒற்றையடி புன்னகையில்
வசந்தம் பெறும் என் உயிர்..,
இவை எல்லாம் சொன்னாலும்
புரியாது எவருக்கும்...
கவிக்கு அழகூட்டும்
அலங்கார வார்த்தைகளாகவே,
அவர்கள் பார்வைக்கு..!
கலங்கிய கண்களின் துயரமும்,
வதங்கிய இதயத்தின் ஏக்கமும்
கரையும் உயிரின் உருக்கமும்
வாசிப்போர் எண்ணங்களை எட்டாவிடினும்,
வந்து சேரட்டும் - நான்
நேசிக்கும் உன்னில் மட்டும்!..
கடந்திடும் ஒவ்வொரு நொடியிலும்
சுமந்திருப்பேன் உன்னை நெஞ்சில்..
விடிந்திடும் ஒவ்வொரு நாளிலும்
பிடித்திருப்பேன் உன் நினைவை மட்டும்..
சுகமாகவே என்னுள் நீயும்,
கணக்கவில்லை சுமையாய் என்றும்..!