வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 4 நடுவிலிருந்து போகும் கதை

................................................................................................................................................................................................

சாமத்துப் பணியாளர் சொல்லத் தொடங்கினார்...

“ அணிமாவின் பாட்டனார் வஞ்சி மன்னனாக இருந்தவர். மன்னர்கள் நாட்டை வைத்துச் சூதாடி, இழந்த கதை இதிகாசத்தில் ஏராளமுண்டு..! இவரும் அதே பாணியில் சோழனிடம் நாட்டை இழந்தார்..! திரும்பவும் வஞ்சியை மீட்டது இப்போதுள்ள மன்னரின் பாட்டனார்..! அரசுரிமை இழந்த பிறகு அணிமாவின் குடும்பம் ராஜ விசுவாசத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. அணிமாவின் சிறிய தந்தை படைத் தலைவர்; தந்தை மல்லர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்..! “

சாமத்துப் பணியாளர் இன்னும் சொல்லிக் கொண்டிருந்தார்.

மறுபுறம் அணிமா சத்திரத்தை நெருங்கிய சமயம் கூகையின் சிணுங்கல் சத்தம் கேட்டது..! இரு முறை திரும்பித் திரும்பிப் பார்த்தாள்..!

இது புள்ளன்று – போர் வீரன்..!

முத்துக் கோர்த்த தலைப்பாகை முகத்தை மறைத்திருந்தது. கருப்பு சராய் உடுத்தியிருந்தான்.

“ அணிமா..! “ ரகசியக் குரலில் அழைத்தான்.

“ யார் நீங்கள்? என்ன வேண்டும்? ” அணிமாவும் குரல் தாழ்த்தி விசாரித்தாள்..!

“நான் நம்பூதிரிக் குடிலிலிருந்து வருகிறேன்..! மணிமாறன் என் பெயர்..! ”

நம்பூதிரிக் குடிலா? மகாராணியின் குருகுலம்..!

வீரன் தொடர்ந்தான், “தேவி கீர்த்திவதனா என்னுடன் பயின்றவர்..! நம்பூதிரிக் குடிலில் ஆடிப் பாடி தேவதையாக உலா வந்தவர் மன்னனைக் கரம் பிடித்த பின் கூண்டுக் கிளியாக இருப்பதாக அறிகிறேன்..! இது உண்மையா? ”

வந்தவன் சட்டென்று கேட்டான். மகாராணி மகிழ்ச்சியாக இல்லை என்பது அணிமாவுக்கும் அரண்மனைத் தோழிகளுக்கும் தெரிந்த நிலையில் பொய் சொல்வதில் அவளுக்கு உடன்பாடில்லை..

“ ராஜ மகுடம் தலைக்கேறுகிறது என்றால் நிம்மதி போய் விடும்தானே? ஆயினும் இது வெறும் தற்காலிகமானதுதான்..! நிலைமை மாறும்..! மகாராணியார் வஞ்சி நாட்டுக்கு வாரிசைப் பெற்றெடுப்பார்..! பிறகென்ன? நித்தமும் வைபோகம்தான்..! ”

வந்தவன் பரிதாபப்பட்டான். பிறகு ஒரு ஜோடி பஞ்சவர்ணக் கிளிகளை கூண்டோடு கொடுத்தான்.

“ நான் பரிசாகக் கொடுத்ததாக மகாராணியிடம் சேர்ப்பிக்கிறாயா? இவை அவர்கள் வளர்த்த கிளிகள்தாம்.. அவரில்லாமல் தடுமாறுகிறது..! ”

கிளிகள் இரண்டும் “ கீர்த்திவதனா கீர்த்திவதனா ” என்று சலம்பின.

அணிமா நெகிழ்ந்தாள். “ இப்பொழுதே சேர்ப்பிக்கிறேன்..! ”

மறுநாளும் அவன் வந்தான்..! இம்முறை குறிஞ்சிப் பூச்செண்டு..!

“ மகாராணியார் உம்மை மிகவும் விசாரித்தார். கிளிகளைப் பார்த்ததும் அவர் கண்கள் கலங்கி விட்டன. ”

அணிமா அறிவித்தாள்.

வந்தவன் மௌனமாக இருந்தான். “ மகாராணி தனியாகத்தான் சயனிக்கிறாரா? ” தயங்கிக் கேட்டான்..!

“ ஆம்.. ”

“ தோழிப் பெண்கள்? ”

“ வெளியே துயில்வர். வைகறையானதும் நூலை இழுத்து அறைக்குள்ளிருக்கும் கிண்கிணிக் கொத்துக்களை சப்திப்பர். மகாராணி எழுந்து கொள்வார்..! ராஜகாளியம்மன் கோயிலுக்குப் புறப்படுவார்..! ”

“ இந்த கார்காலத்தில் வைகறை தெரியுமா? ”

“ என் தூபக்கடிகை எதற்கு இருக்கிறது? துல்லியமாகத் தெரியும்..! ”

“ நீ அறிவாயா? உங்கள் தேவி சூரியோதயத்துக்கு முன் எழுந்து பழகியவரில்லை..! ”

மணிமாறன்தான் தொடர்ந்தான்..

“ இருள் அகலாத வைகறையில் அந்தப்புரத்தில் என்ன வெட்டி முறிகிறது? கவரி வீசும் கடைநிலைப் பெண் கூட கண்மூடிக் கிடக்கிறாள்.. இங்கு அரசக் கிழத்தி முதல் ஆளாக எழுந்து, முதல் ஆளாக வெளியேறுகிறாள்..! ”

“ நாளின் தொடக்கத்தில் ஆலய வழிபாடு நல்லதுதானே? ”

“ அப்படியானால் அதை உன் அரசரைச் செய்யச் சொல்லேன்.. பாணிணி முனிவரின் ஆக்ஞையை நிறைவேற்றுகிறீர்களோ? அவர் நவின்றது நாளின் தொடக்கத்தை மட்டுமல்ல, நாயகனின் துணையையும் சேர்த்துதான் சொன்னார்.. அதை வசதியாய் மறந்து விடுங்கள்..! சேர நாட்டில் ஆண் மக்கள் மேகத்தில் சூல் கொண்டு பிறந்தார்கள் போலும்....? ”

அணிமா ஒன்றும் சொல்லவில்லை. புதிதாகத் திருமணமான பெண்ணைக் குறித்து தந்தையோ, சகோதரனோ அங்கலாய்க்கும் வார்த்தைகள்தாம் இவை..!

பூச்செண்டை எடுத்துக் கொண்டாள்..

இரண்டு நாள் கழித்து திரும்பவும் அவன் வந்தான். இம்முறை அவன் கொடுத்தது தூபத்தண்டில் வைக்கக் கூடிய ஊதுபத்தி..!

“ இதை நறுக்காமல் அப்படியே வை அணிமா..! ”

அணிமா கண்களால் அளந்தாள். ”பயன்படாத உயரம்” ஐந்து நாழிகையாக இருந்தது.

“ இதை அப்படியே வைக்க இயலாது வீர்ரே..! காலத்தை தாமதமாகக் காட்டும்..! வைகறை தவறி விடும்..!...”

“ தவறட்டுமே அணிமா..! எங்கள் பெண் நிம்மதியாகத் தூங்கட்டுமே..? நீயே சொல்..! இந்தப் பனியில் காட்டுக்குள்ளிருக்கும் ராஜகாளியம்மன் கோயிலுக்கு மன்னரின்றி தனியே செல்வது பாதுகாப்பா? இளங்காலையில்தான் செல்லட்டுமே? ”

“ அது சரி! அதை முடிவு பண்ண வேண்டியது நீங்களும் நானுமல்லவே? “

“ அணிமா..! ” அவன் பொற்காசுப் பையை எடுத்தான். அவள் செவிக்கருகில் குலுக்கினான்... “ ஆயிரம் பொற்காசுகள் அணிமா,,! தோழிதான் நேரம் பார்த்து ராணியை எழுப்பப் போகிறாள் – வைகறை கழித்து ராணியை எழுப்பும் பட்சத்தில் அது அவள் குறையாகி விடும். தன்னைக் காத்துக் கொள்வதற்காக, மகாராணியார் அயர்ந்து உறங்கினபடியால் அவர்கள் துயிலெழவில்லை என்பாள். அதற்குள் ஊதுபத்தியை சரிப்படுத்த உனக்கு நிறைய சந்தர்ப்பங்கள் வாய்க்கும்..! தானாக வரும் திருமகளைத் தள்ளாதே..! ”

அணிமா பொற்காசுப் பையை புறங்கையால் தள்ளினாள். அவள் இதழில் இகழ்ச்சி மண்டியது.

“ நான் வருகிறேன் வீர்ரே..! ”

சடுதியில் புறப்பட்டாள்.

“ அணிமா... அணிமா நில்..! போகாதே அணிமா..! ”

அந்த வீரன் குறுவாளால் தன் கையைக் கீறி அணிமா முன் ரத்தக்கோடு இழுத்தான். கொப்பளித்து வந்தது ரத்தம்..

“ என்ன வீர்ரே, இது விளையாட்டு? ” அணிமா நின்றாள்.

“ உன்னை அவமானப்படுத்துவது என் நோக்கமில்லை. ஆனால் அணிமா ... நான் சொல்ல வந்ததைக் கேள்..! ”

அணிமாவின் கைகளை அவன் பற்றினான். அந்தக் கைகள் வியர்வையில் கசகசத்தும் பயத்தில் நடுங்கியும் தெரிந்தது. அந்த வீரனின் குரலிலும் பதட்டமிருந்தது.

அணிமா வீரனைப் பற்றி அருகில் அமர்த்தினாள்.

“ என்ன வீர்ரே? எதையும் என்னிடத்தில் தயங்காமல் சொல்லுங்கள்..! ”

“ எப்படி சொல்வது? காதும் காதும் வைத்தாற் போல் செய்து முடிக்கலாம் என்றல்லவோ நினைத்தேன்..! நீ பிடிவாதம் பிடிக்கிறாயே? வைகறையில் ராஜகாளியம்மன் கோயில் போகும் வழியில் மகாராணியின் உயிருக்கு ஆபத்து..! அந்த ஆபத்து அரண்மனைக்குள்ளும் நடக்கலாம்..! நிச்சயமில்லை..! மகாராணி சயன அறையை விட்டு வெளி வராதிருப்பதுதான் பாதுகாப்பு..! ராணியை சயன அறையில் வைத்திருக்க நான் செய்கிற சின்ன முயற்சி இது..! வேறு என்ன செய்வது நான்? ”

அணிமா பிரமித்து நின்றாள்.

“ மகாராணிக்கு யாரால் ஆபத்து? எப்படி ஆபத்து? ”

“ மிகச் சரியாகத் தெரியவில்லை அணிமா..! அணிமா..! சூரியோதயத்துக்குப் பின் உண்மை விளங்கி விடும்..! அந்தப்புரத்தில் இந்த ஊதுபத்தியை அப்படியே வைத்து விடு, அணிமா..! வழக்கமாக நீ வைக்கும் பத்தியில் சந்தன மணம் வீசும்..! இதில் சம்பங்கி மணம் கமழும். அந்த மணத்தை நுகர்ந்து விட்டு திருப்தியுடன் சென்று விடுகிறேன் அணிமா..! தயவு செய்..! என் சகோதரி போன்ற உன் மகாராணிக்கு உயிர்ப் பிச்சை கொடு...! ! ”

அடுத்து அவன் செய்தது அணிமா எதிர்பாராதது. உடல் குலுங்கத் தேம்பினான். நடக்கக்கூடாத ஒன்றை கற்பனையில் கண்டவனாக அவன் தேகம் நடுங்கியது. கழிவிரக்கத்துடன் அப்படியே சோர்ந்து மடங்கினான்.

அணிமா ஊதுபத்தியுடன் அந்தப்புரம் சென்றாள். மகாராணியார் சயன அறைக்கு வந்து விட்டிருந்தார். மெலிதான யாழிசையில் தலைவன் பிரிவால் வருந்தி தலைவி இசைக்கும் பாடல் சயன அறையிலிருந்து கசிந்து வந்தது. அது அணிமாவின் இளமனதையும் வருத்தவே செய்தது.

மணிமாறன் அளித்த ஊதுபத்தியை அப்படியே பற்ற வைத்து தூபத்தண்டில் செருகினாள். சந்தன மணம் போய் சம்பங்கி வாசம் கமழ்ந்தது. ராணியின் தோழி மறுநாள் மகாராணியின் நீராட்டலுக்காக பூலாங்கிழங்கு, பாசிப்பயறு ஆகியவற்றை ஊற வைத்து விட்டு, ஆடை அலங்காரப் பொருட்களை முறைப்படுத்தி வைத்தாள். அணிமாவைக் கண்டு நேசப்புன்னகை சிந்தியவள் அயர்வு மிகுதியில் சுருண்டு படுத்து தூங்கி விட்டாள்.

அந்தப்புரத்து தோரண வாயிலைக் கடந்த சமயம் அணிமா நின்றாள். அவள் மனசாட்சி அவளை உறுத்தியது. சயன அறைக்குள் இருப்பது மகாராணியாருக்குப் பாதுகாப்பு என்பதுதானே நோக்கம்? இதை வைகறையில் மகாராணியிடம் தெரிவித்து எச்சரிக்கை செய்வதல்லவோ பொருத்தமாக இருக்கும்? இதை விடுத்து கொக்கின் தலையில் வெண்ணெய் வைப்பது போல் தொழில் தர்மம் தவறுவது தேவையா?

அணிமாவுக்கென்று தனிப்பெருமை உண்டு; அவள் பாரம்பரியமும் பெருமைக்குரியதே..! அப்படியிருக்க, திருட்டுத்தனம் எதற்கு? அவளுடைய தேவிக்கு ஆபத்தென்றால் அவளல்லவோ காத்திருந்து தடுக்க வேண்டும்? பழைய அரசரான சக்கவர்த்தியிடமிருந்து எங்கும் தங்கு தடையின்றி சென்று வரத்தக்க கணையாழி பெற்றது கடமை தவறுவதற்கா? அல்லது தன்னுயிர் கொடுத்தேனும் தலைவியை காப்பாற்றுவதற்கா?

திரும்பவும் அந்தப்புரம் சென்றாள் அணிமா. மணிமாறனைக் கையறு நிலையில் கண்ட தோற்றம் அவளைக் குழப்பியது. அவ்வளவு சொல்லியும் மணிமாறனின் வேண்டுதலை மீறுவது நல்லதாகுமா? அவள் ஒரு சாதாரண பணிப்பெண்..! அவள் வார்த்தை அம்பலம் ஏறுமா? எதிர் வரும் அபாயம் இன்னதென்றே தெரியாத நிலையில் அவளால் தடுக்கத்தான் முடியுமா? அவளால் தடுக்க முடியும் என்றால் மணிமாறன் ஏன் இந்த வழியை நாட வேண்டும்?

இறுதியில் அவள் தொழில் தர்மமே வென்றது. சம்பங்கி மணம் போய் சந்தன மணம் உண்டானது.

அணிமா அந்தப்புரத்திலேயே சற்று உயரமான இடமாகப் பார்த்து ஒடுங்கினாள். இனம் தெரியாத பயம் இருளெனக் கப்பியது.

தவறிழைத்து விட்டோமோ?

வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை. நடுநிசியிலும் ஒருமுறை சுற்றி வந்தாள். அபாயத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை.

அரையும் குறையுமாகத் தூங்கி இரவைக் கழித்தாள். சற்றுக் கண்ணயர்ந்தாலும் துர்க்கனவு தோன்றியது...! “ அடிப் பெண்ணே, உன் மகாராணியை நீயே கொன்று விட்டாயே.. ” என்று கனவில் வந்து சாபம் கொடுத்தான் மணிமாறன்...!

வைகறையில் விழித்தாள். தோழிப்பெண் என்ன செய்கிறாள்? மகாராணியின் சயன அறை காலதரைத் தாண்டி வரும் கிண்கிணிச் சத்தம் கேட்கவில்லையே?

சயன அறைக்கு வெளியே, தோழி இறந்து கிடந்தாள்..! ! ! ! ! முகம், கையெல்லாம் நாவல் பழ நிறத்துக்குப் போயிருந்தது..! வாயில் நுரை தள்ளிக் கிடந்தது....! ! ! !.


தொடரும்
................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (12-Nov-15, 12:41 pm)
பார்வை : 177

மேலே