மகிழ்ச்சியின் முயற்ச்சி

காற்றின் அலை கிழித்து
உன் உடல் உரசும்
என் அன்பை -தட்டி விடுகையில்
புரிகிறது -எட்டி
இருக்கச் சொல்லும்
உன் எண்ணம்

உயிர் பருகும் -உன்
உதடுகளின் உஷ்ணமான
வார்த்தை பற்றி அறிந்ததில்லை
"நீ" என்ற சொல் - என் உலகை
நீட்டிச் செல்லும் என
நினைத்த முதல் தருணத்தில்

எல்லாம் எடுத்துக் கொண்ட பின்
எஞ்சியிருக்கும் - என் உணர்வு
பற்றிய சிந்தனைகள்
மரத்துப்போய் விட்டதாய்
எடுத்துக்காட்டுகிறாய்
அழைப்புகளை துண்டித்து
அங்கலாய்க்கையில்


சுற்றிக்கிடந்த சுகங்கள்
பற்றிக் கணக்கற்றிருந்து ...!
உன் சின்னச் சின்ன
பாசங்களுக்குள் சிக்கிக்
கொண்ட பின் பெற்ற
கிழிசல்களிலான காயங்களின்
வடுக்கள் தோய்ந்த போது
புரிந்து கொண்டேன்
தொலைந்து போன
என் மகிழ்ச்சி பற்றி

வாழ்கையின் போக்கிலான
பள்ளங்கள் தேடி
வார்த்தைகளால் வசை சொல்லி
நிரப்ப நினைக்கிற -உன் முயற்ச்சியில்
நொறுங்கிப் போய்
சில்லுச் சில்லாய் -சிதறும்
என் சந்தோசங்களை
அள்ளிக் கொள்ளவென
ஆண்டுகள் பல சென்றும்
ஒன்றேனும் பொறுக்கிய பாடில்லை


துயரங்களை முழுவதுமாய்
அள்ளி அப்பியபடி
நகருகின்ற நாட்காட்டியின்
விடுமுறை நாளை
எதிர்பார்த்து புன்னகைக்க
ஏங்குகிற இதயம் ..!


கொஞ்சம் கொஞ்சமாய்
முன்னேற முனைகிற
முயற்ச்சியுடன் - சற்று
ஒடுங்கிப் புன்னகைக்கப்
பார்க்கிற உதடுகளின்
வெடிப்புகள் விளக்குகிறது
உன் காதல் ரணத்தின்
ஆழம் பற்றி

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (13-Nov-15, 10:12 am)
பார்வை : 159

மேலே