விஞ்ஞானம் - போட்டிக் கவிதை

விலங்கொடு விலங்காய் அலைந்த மனிதனை
விளக்கி உயர்த்திய விந்தை விஞ்ஞானம்

வெய்யில் மழை குளிர் எதுவந்தாலும்
நைந்திடாமலே காத்தது விஞ்ஞானம்...

ஏன்? எப்படி? எதற்கு? எனும்பல
வினாக்கள் விடுப்பதில் வளர்வது விஞ்ஞானம்

இயற்கையின் மடியில் இருந்த வரைக்கும்
தாயின் கரமென தழுவிய ஞானம்,

இயற்கை மீறிய இயல்புக ளாலே
அரக்கப் பிடியென அழுத்தும் விஞ்ஞானம்...

தானும் உயர்ந்து தன்னைச் சூழ்ந்த
ஏனை உயிர்களும் ஏற்றம் காண

ஆவன செய்யும் அறிவைத் தேடாது,
தேவைக்கு மீறிய தேடல்கள் எதற்கு?

தேனீயின் கூடோ, குருவியின் கூடோ
வீணில் இயற்கையை வீழ்த்துவ தில்லையே,

ஆனால் மனிதன் ஆடம் பரமாய்
வான ளாவிய கட்டிய வீடுகள்

சுற்றுச் சூழலைச் சீர்க்குலைக் கின்றதே,
மற்ற உயிர்களை மங்கச் செய்கிறதே!

சிங்கமோ புலியோ எலியோ மானோ
எந்திர ஊர்தியில் ஏறுவ தில்லையே,

மனிதன் ஏறும் வண்டிகள் புகையால்
புனிதம் கெட்டுப் போகுதே உலகே!

இயற்கை மடியில் குழந்தையாய் இருப்போம்
இன்னும் பலப்பல கேள்விகள் கேட்போம்,

அறிந்து கொள்ளும் ஆர்வம் ஒன்றே
சிறந்த விஞ்ஞானம் சிந்தையில் கொள்வோம்,

அறிந்து கொண்ட அறிவை ஆக்கம்
புரிய மட்டுமே புரிந்துகை யாள்வோம்!

எழுதியவர் : விசயநரசிம்மன் (16-Nov-15, 1:02 pm)
சேர்த்தது : விசயநரசிம்மன்
பார்வை : 4347

மேலே