திருந்துவாரோ
புற்றீசல் கிளம்பிவரும் வாழ்வதற்கு
பார்த்திருந்து குருவியொன்றுக் கொத்தும் ! பூச்சி
சுற்றிவர விளக்குதனை பல்லியொன்று
சுவைப் பார்க்கும் , நிலைப் போலே செல்வன் இங்கே
பற்றிவரும் பசிப்பிணியை தணிப்பதற்கு ,
பறிக்கின்ற பாட்டாளி வாழ்வைக் கொன்றே
உற்றிட்ட செல்வத்தில் கொழுத்திருப்பான் !
உழைக்காமல் சொர்க்கத்தை அனுபவிப்பான் !
பட்டினியாய் பரிதவித்து பாதைதன்னை
படுக்கையென ஆக்கியவன் பிச்சை வேண்டி
‘ பட்டமரம் ‘ போல்செல்வன் வீட்டின் வாசல்
‘ பம்பரம்போல் ‘ அடிவிழும் நிலையில் நிற்ப்பான் !
பட்டுடையால் பானைப்போல் வயிற்றை மூடி
பட்டைகளால் நெற்றியிலே நாமம் தீட்டி
குட்டியது யானையல்ல என்னும் வண்ணம்
கொரட்டினிலே வந்தவனோ துப்பிச் செல்வான் !
கருப்பினிலும் வெள்ளையிலும் வாங்கிப் பெண்கள்
கற்ப்புதனைகாசுக்கே வாங்கி , பண்ட
இருப்பினிலே கலப்படத்தை செய்து , மக்கள்
ஈட்டுகின்ற செல்வத்தைக் கொய்து , தெய்வ
வரம்வேண்டி பதிதேடி சென்று , செல்வம்
வாரியவன் இறைத்திடுவான் ! இவனை ஊரார்
பெரியதனக் காரெனனும் பட்டம் சூட்டிப்
பிழைசெய்து வாழ்கின்றார் திருந்துவாரோ ?