மருத்துவம் இல்லாமல் போகட்டும்
கண்கள் கிள்ளிய காயம்
புன்னகைக் களிம்பால்
முக்கால்வாசி ஆறிப்போனது
இன்னும் கால்வாசி
ஆறமறுத்து
அழிச்சாட்டியம் செய்கிறது...
கண்ணில் தெரியும் அனைத்தையும்
காட்சிப் பிழையாக
ஆமோதித்துகொண்டு
புருவம் கனத்து
பார்க்கும் பக்கமெல்லாம்
உனை மட்டுமே
நிரப்பச் சொல்கிறது...
தேயும் கால நிலவும்
தேன் பிழியும் என்று கேட்டதுண்டு
பேயன் குலை வாழையை
உடன் பிசைந்தூட்டும்
மகத்துவமென்று
இப்போது தெளிந்தது...
சகுனம் பார்க்க வில்லை
சன்னல் பார்த்து வந்தது
மாயம் இது என்ன
மனசு கனக்கிறது...
ஈதே காதல் என்றால்
இப்படியே நோகட்டும்
இதுதீர மருத்துவம் இனி
இல்லாமல் போகட்டும்...