நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம்
#யோகசாதனை ...[1].
..............பதஞ்சலி யோக சூத்திரம்
கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது.
யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.
நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன.
ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை.
அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம்.
நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .
அதைவிட அபாயகரமானது, அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள் அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது.
நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும்.
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளன.
அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான்.
குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது .
மிதமிஞ்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம்.
இது அதற்கானமுயற்சி....
rk...