என் இயல்பான மாலை

இன்று நான் படித்த
கவிதையை சொன்னேன்...
டிபன் பாக்ஸில் வைத்த
தேங்காய் சாதம்
கெடாமல் இருந்ததா என்றாள்...
அலுவகலத்தில்
நடந்ததை சொன்னேன்...
அலமாரியில் புத்தகங்களை
அடுக்கிவிட்டேன் என்றாள்...
நேற்று வைத்த மருதாணி
உன் கையில் நன்றாக
சிவந்திருக்கிறது என்றேன்...
ரொம்ப களைப்பாக
இருக்கிறதா என்றாள்...
மதியம் கொஞ்ச நேரமாவது
தூங்கினாயா என்றேன்...
காப்பி எடுத்துட்டு
வரவா என்றாள்...
வார இறுதியில்
சினிமா பார்க்க
போகலாம் என்றேன்...
இரவு சாப்பிட உங்களுக்கு
என்ன வேணும் என்றாள்...
இப்படித்தான்
கவிதைகளாய் மாறுகிறது
என் இயல்பான மாலை...