நாளும்நாம் செய்வோம் முயற்சி ----- கலி விருத்தம்

நாளும்நாம் முயற்சிதனை நன்றெனவே செய்திடுவோம் .
சூளுரைத்தே இவ்வுலகில் சுகமாக வாழ்ந்திடுவோம் .
மூளுகின்ற பிணக்குகளும் முயற்சியினால் தீர்ந்திடுமே .
மாளுகின்ற சோம்பல்கள் மாறிவிடும் பூமியிலே .


வேண்டுகின்ற முயற்சியினால் வேளாண்மை பல்கிடுமே .
யாண்டுமிதைச் சொல்லிடுவேன் யாங்கணுமே அனுபவத்தில்
ஆண்டிடலாம் ; வெற்றிதோல்வி கண்டதுமே முயற்சியினால்
மாண்புடைய மானிடரே மாறிவிடும் எந்நாளும் .


கல்வியினில் முயற்சிசெய்தால் காலமதை வென்றிடலாம்
பல்லோரும் இதனைத்தான் பாரோர்க்குச் சொல்லிடுவார் .
நல்லவர்கள் முயற்சினால் நன்மைகளும் விளைந்திடுமே .
அல்லவர்கள் அயற்சியினால் அவதியுறும் இவ்வுலகு .



சாதனைகள் படைத்திடலாம் சாதிப்போம் நாமிங்கே
சோதனையும் தீர்ந்துவிடும் சோகமது மாறிவிடும் .
வேதனையும் இனியில்லை வேண்டுவனக் கிட்டிடுமே .
சீதனமும் இதுவென்றே சீர்பெறுவீர் முயற்சியினால் .


வெற்றிகள் படிந்திருக்கும் வென்றவர்கள் முயற்சியினால்
தோற்றவர்கள் வென்றிடலாம் தொடரட்டும் முயற்சியுமே .
மாற்றங்கள் உண்டாகும் மாடமில்லை முயற்சியினால் .
சாற்றுகிறேன் இவ்விடத்தில் சாதிப்பீர் முயற்சியினால் .


முயற்சிதன்னில் கவனத்தை முழுமையுடன் செலுத்தியவர்
அயற்சியின்றி எந்நாளும் அகிலத்தில் வாழ்ந்திடுவர் .
பயிற்சினாலே பெற்றிடலாம் பதித்திடுவீர் நெஞ்சத்தில் .
முயற்சியையே குறிக்கோளாய் முன்னுரிமை தந்திடுவீர் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Nov-15, 2:19 pm)
பார்வை : 61

மேலே