சுப்பையாவும் குப்புவும் பாகம் 1 - உதயா

சுப்பையாவும் குப்புவும் பாகம் 1 - உதயா
---------------------------------------------------------------

பசுமை வளங்கள் காடு கரைதோறும் , வனந்தோறு ஆட்சி செய்ய , மண்ணெண்ணெய் விளக்கின் தயவினால் மட்டும் இரவில் தேவையானப் போது வெளிச்சத்தைப் பெற்றுக் கொண்டும் , மின்சாரம் வாசமே இல்லாத அத்திமூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்துக் கொண்டும், ஒரு ஏழை விவசாயி குடும்பத்தின் மூத்த மகனாய் வாழ்ந்தும் வருபவன் தான் சுப்பையா. அவனுக்கு கிட்டத்தட்ட ஏழு வயது இருக்கும். அப்போதெல்லாம் பள்ளிக் கூடம் என்பது சுப்பையா போன்ற ஏழ்மை குடும்பத்தின் பிள்ளைகளுக்கு அவ்வப்போது நினைவில் வந்து எட்டிப் பார்த்துவிட்டு அப்படியே ஓடிவிட வேண்டும். ஒருவேளை உதடுவரை வந்துவிட்டால் " ஏன்டா இங்க சோத்துக்கே வழிய காணும் , உனக்கு படிப்பு கேக்குதாடா " என்று தந்தையிடம் கொஞ்சம் திட்டும் , அவர் ரொம்ப கோவமாக இருந்தால் சில அடிகளும் உதைகளும் கிட்டிவிடும்.

சுப்பையாவின் தந்தை குப்புசாமி தினந்தோறும் வயல்களுக்கு நீர் பாய்ச்ச கவலை (நீரிறைக்கும் தோற்கூடை) இறைக்க அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அவர் எழும் போது சுப்பையாவையும் எழுப்பி தன்னுடனே அழைத்து செல்வார் . குப்புசாமி ஒரே ஒருமுறை தான் அழைப்பார். அந்த ஒருமுறை அழைப்பிற்கே சுப்பையா எழவில்லை என்றால் அந்த நேரத்திலே அடி நிச்சயம். ஒருமுறை அப்படிதான் குப்புசாமி அழைத்தும் எழாமலே உறங்கிக் கொண்டிருந்த சுப்பையாவின் முதுகில் அவர் ஓங்கி உதைத்ததில் சுப்பையா பக்கத்தில் இருந்த சுவரில் முட்டிக்கொண்டான். அது மண்ணினால் ஆனா சுவர் என்பதால் அதில் இருந்த சிறிய கல்லொன்று சுப்பையாவின் நெற்றியினை பதம் பார்த்ததுடன் அடையாளமாய் நெற்றியிலே படுக்கையும் போட்டுக்கொண்டது.

அந்த சம்பத்தில் இருந்து சுப்பையா முதல் அழைப்பிலே எழுந்துவிடுவான். அவன் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டிருக்கும் போதே " டேய் பையா நான் முன்னால போயி வடத்தை(கனமானகயிற்றை) எடுத்து கவல பூட்டி வெக்கிற நீ மாட்ட(மாடு) புடிச்சின்னு வா " என்று சொல்லி விட்டு குப்புசாமி வயலுக்கு சென்று விட்டார் .

சுப்பையா மாட்டு தொழுவத்திற்கு சென்று மாடுகளை பிடித்துக்கொண்டு , ஒரு மாடு முன்னே செல்ல , மற்றொரு மாடு பின்னே வர , சுப்பையா இரண்டு மாடுகளுக்கு நடுவிலும் வயலினை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான் . சுப்பையா தோராயமாக 2 அடி 8 அங்குலம் தான் இருப்பான் . ஆனால் காளைகள் ஒவ்வொன்றும் 6 அடி இருக்கும் அதனுடம் மிகவும் பலம் வாய்ந்தவை. அவைகள் ஒரு குழந்தையைப் போல அந்த ஏழு வயது சிறுவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு , அமைதியாகவும் , சுப்பையா வேகமாக போக சொன்னால் வேகமாகவும் , ஏதாவது ஒரு பக்கம் திரும்ப சொன்னால் அந்த பக்கம் திரும்பிக் கொண்டும் செல்லும். ஏனெனில் அவைகள் 6 அறிவு கொண்ட சில கேவலமா மனித பிறவிகள் அல்ல.
பாசத்திற்கு கட்டுண்டு வளர்ந்து வாழும் சாதாரண ஐந்தறிவு ஜீவன் .

வயலினை நெருங்கியதும் குப்புசாமி மாடுகளைப் பூட்டி கவலை இறைக்க தொடங்கிவிட்டார். சுப்பையாவோ நீர் பாயும் கழனியின் ஓரத்தில் அமர்ந்துக்கொண்டான். கழனி கொஞ்சம் பெரியது என்பதால் எப்படியும் இரண்டும் மணி நேரம் தேவைப்படும் கழனியில் முழுமையாய் நீர் நிரம்ப.நீர் நிரம்பியதும் அங்கிருந்தே தந்தைக்கு குரல் கொடுத்தான் சுப்பையா. குப்புசாமி கவலையில் இருந்து மாடுகளை விடிவித்துக் கொண்டு ஏர் உழுவதற்காக கலப்பையை தூக்கிக் கொண்டு முன்னே செல்ல , மாடுகளின் கழுத்துப் பூத்துக் கயிறினை இடுப்பில் சுற்றிக் கொண்டும் தூக்க இயலாத நெவுத்தடியை ( மாட்டுக் கழுத்து தடியை ) இழுத்துக் கொண்டே பின்னாடியே சென்றான் சுப்பையா

குப்புசாமி ஏர் பூட்டி உழுதுக்கொண்டே " டேய் பையா மணி 5 ஆகப் போது ஊட்டுக்கு போயி நீஸ் தண்ணி ( பழைய சாதத்தில் ஊற்றி வைக்கப் பட்ட தண்ணீர்) கொண்னாடா " என்றதும் சுப்பையாவின் ஓட்டம் வயலில் தொடக்கி வீடுவரை தொடர்ந்தது . சுப்பையா வீட்டிற்கு வருவத்திற்குள், சுப்பையாவின் அம்மா அம்மாக்கண்ணு 3 மணிக்கெல்லாம் எழுந்து வாசலைப் பெருக்கி , வாசலுக்கு எதிரே உள்ள தெருவினையும் பெருக்கி சுத்தம் செய்துவிட்டும் வாசலில் சாணம் தெளித்து கோலம் இட்டு நீஸ் தண்ணீரையும் தயாராக பானையில் வைத்திருந்தாள். சுப்பையா வந்ததும் " அம்மா அம்மா அப்பா நீஸ் தண்ணீ கேட்டுச்சி மா " என்றான் . அவள் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டே " சுப்பு வந்துடையாடா பானைல கீது பார்டா பத்ரமா எத்துனு போ " என்றாள் . சுப்பையா நீஸ் தண்ணீரை தந்தையிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் சூரியன் வந்துவிட்டான் மணி எப்படியும் 6 இருக்கும்.

அப்போதெல்லாம் கடிகாரம் அந்த ஊரில் ஜெயராமன் பெட்டிக் கடையில் மட்டும் தான் இருக்கும். அதுவும் பழைய கை கடிகாரம். பெரும்பாலும் அனைவரும் சூரியனைக் கொண்டே நேரம் கணித்துக் கொள்வார்கள். சுப்பையா வீட்டிற்கும் வந்ததும் ஆட்டு தொழுவத்தையும் மாட்டுத்தொழுவத்தையும் சுத்த செய்துவிட்டு. மீண்டும் வயலுக்குச் சென்று கிணற்றில் இரண்டு மூன்று முறை குதித்துவிட்டு, வீட்டிற்கும் வரும் வழியில் ஒரு வேப்ப குச்சியினை வாயில் மென்னுக்கொண்டே , அதை பாதி வழியிலே போட்டு விட்டு இரண்டு கை தண்ணீர் எடுத்து வாயினை கொப்பளித்து துப்பிக் கொண்டே வீடு திரும்பினான் சுப்பையா.

வீட்டில் இருந்த பழைய சாதத்தை கரைத்து வெங்காயத்துடன் சேர்த்து உண்ணும் போது மணி 8 - ஐ நெருங்கி இருந்தது. சுப்பையாவின் அம்மா வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். " அம்மா அம்மா நான் ஆட்ட ஒட்டினு போற மா " என்றான் சுப்பையா ." டேய் தூக்கு சட்டில கீர கூல(கூழ்) எத்துனு போடா மத்யானம் சப்டுகுவ " என்று சுப்பையாவின் அம்மா கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள் . " சேரி நான் போய்டு வர " என்று மந்தையில் இருந்த 10 ஆடுகளை ஒட்டிக்கொண்டு அதனை தன் நண்பன் ராமுவின் 12 ஆடுகளுடன் இணைத்துக் கொண்டு காட்டுப் பகுதிதியை நோக்கி இருவரும் பேசிக்கொண்டே சென்றனர் .

ராமுவை அனைவரும் பெயர் சொல்லி அழைப்பதை விட " நொண்டி நொண்டி " என்று தான் அழைப்பார்கள் .ஏனெனில் ராமுவின் வலது கால் கொஞ்சம் மெலிந்து வளைந்தும் இருக்கும். பிறப்பில் இருந்தே அப்படிதான். ஆனால் ராமு ரொம்ப கெட்டிகாரன். ராமுவிற்கும் கிட்ட தட்ட சுப்பையாவின் வயதுதான்.

ஆடுகளை காட்டின் மேல் பகுதி வரைக்கும் சென்று விட்டுவிட்டு , அங்கு தான் பக்கத்தில் பாறைகளிலோ
ஆற்று மணலிலோ விளையாடிக் கொண்டே நாள் பொழுதினை கழிப்பார்கள். அவர்களைப் போலவே அந்தப் பகுதியின் சிறுவர்களும். ஒருமுறை ராமுவை பார்த்து " போடா நொண்டி நொண்டி " என்று சக சிறுவர்கள் கிண்டல் செய்தலில் ராமுவிற்கு பயங்கரமாய் கோபம் வந்துவிட்டது. ராமு பக்கத்தில் இருந்த ஆடு மேய்க்கும் கம்புனை எடுத்து சுற்றி மணலில் வைத்து வீசியதில் ஒரு கையளவு மணல் , விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்த ஒரு சக சிறுவனின் வாயினை அடைத்தது.

ராமு சிலம்பாட்டத்தில் மட்டும் அல்ல குறிப்பார்த்து அடிப்பதிலும் கில்லாடி. அது மட்டும் இல்லாமல் அந்த ஊரிலே பள்ளிகூட நிழலில் அமர்ந்த ஐவரில் அவனும் ஒருவன். அந்த சம்பவத்திற்கு பிறகு பெரும்பாலும் அச்சிறுவர்கள் அவனை " நொண்டி " என்று கிண்டல் செய்வதில்லை

தொடரும் ...

எழுதியவர் : உதயா (25-Nov-15, 8:08 am)
பார்வை : 172

மேலே