காலம் சொன்ன பதில்

காலத்தின் வாயிலில்
கட்டுக் கடங்கா கூட்டம்,
வாழ்வில் வஞ்சிக்கபட்டோரின்
முறையீடுகள்
கேட்கப்படுகின்றன
என்னும் வதந்தியால்....
விசாரித்ததில்
உண்மை என்பது
உறுதி செய்யப்பட்டது....
நியாயம் கேட்க்கும்
முறையீடுகள்,
அநியாயம் பற்றிய
ஆற்றாமைகள்,
மறுபாரிசீலனை கோரும்
மனுக்கள்.
எங்கும் அழுகையோடும்
ஆற்றாமையோடும்
அலைமோதும் மக்கள்....
கதவு திறக்கப்பட்டது
காலம் கம்பீரமாக
வெளியே வந்தது.
நிசப்தம் சிறிது நேரம்
நிலவியது.
கனிவோடு பேசியது காலம்
உங்களது முறையீடுகளைக் கேட்டு
நானும் திக்குமுக்காடிப் போனேன்
கனத்த இதயத்தோடுதான்
உங்கள் கண்முன்னே
நிற்கிறேன்.
கடவுளின் பரிசீலனைக்காக
அனைத்தையும் வைத்திருக்கிறேன்.
நான் வெறும்
காரிய தரிசிதான்
முடிவெடுக்கும் அதிகாரம்
'அவரி'டத்தில் இருக்கிறது.
அதனதன் காலத்தில்
அது, அது நடக்கும்
நம்பிக்கை வையுங்கள்.
சொல்லிமுடித்து விட்டு
கதவை தாழிட்டது காலம்.
"அப்போதிருந்தே
அதைத் தான்
கேட்டுக் கொண்டிருக்கிறோம்"
கூட்டத்தில் முணுமுணுப்பு அடங்க
நேரமானது.
~கவுதமன்~