அவன்

அவனைப் பாடுங்கள் ...
அவன்
யுகங்களுக்கு முன்
பிரளயத்தில் புதையுண்டு
எண்ணையான தாவர பூதங்களுக்கு
சாப விமோசனம் தந்து
எரிசக்தியாய் மாற்றினான்
மின்மினிகளும் ,நிலவும்
நட்சத்திரங்களும் ஒளிர்ந்து
காட்டுத்தீ மட்டும் எரிந்திருந்த
காலங்களின் இருள்களில்
தீபங்கள் ஏற்றினான்
மினசாரத்தை
கடவுளாக
கண்டெடுத்தான்
கல்லைக் குடைந்து
மண்ணைக் குழைந்து
மனைகளும் மாடங்களும்
கோபுரங்களும்
கட்டினான்
அவன்
வெட்டிச் செதுக்கிய
மரங்களின் கதைகள்
தூற்றப்படுகின்றன
நட்டு வளர்த்த
வனங்களின் தவங்கள்
போற்றப்படுவதில்லை
பறவைகளையும்
பசுமையையும்
கண்ணீரையும்
கலைகளையும்
அவன் இன்னும்
நேசித்துக்கொண்டுதான்
இருக்கிறான்
அவனைப் பாடுங்கள் ...
அவன்
கடவுளைப் படைத்தவன்
காலங்களை ரசிப்பவன்
அவனைப் பாடுங்கள்
அவன்
கனவுகள் பசித்தவன்
காற்றை இசைப்பவன்
இதயத்தைச்
சிகரமாக்கி
அன்பினைப்
பனியாய்ப் போர்த்தியவன்
வாழக்கையின்
வனங்களிலெல்லாம்
ஜீவ நதியாய்
ஓடிக்கொண்டிருப்பவன் ..!