போற்றப்பட வேண்டியது ---- தாய்மை ---- தரவு கொச்சகக் கலிப்பா

போற்றிடுவோம் தாய்மையினைப் போற்றுகின்றேன் நாளும்நான்
மாற்றமில்லை இதிலென்றும் மகத்துவமாம் தாயுள்ளம் .
சீற்றமில்லை மனத்தினிலும் சீர்த்தமிகு நன்னெறியை
ஏற்றமுடன் சொல்லிடுவேன் ஏற்றிடுவோம் எந்நாளும் .


அன்புடைய நெஞ்சத்தா லாளுகின்ற சக்தியினை
அன்னையென்று செப்பிடுவோ மாசிகளைத் தந்திடுவாள்
என்றனையும் காத்தருளு மெந்தெய்வ மவளன்றோ?
மன்றிலுனை வாழவேண்டி மனதார வேண்டுகின்றேன் .


உருக்குலைந்துப் போய்விட்ட உறவுகளின் நிலைகண்டு
கருசுமந்தத் தாயவளோ கண்ணீரில் நின்றிடுவாள் .
நெருப்பெனவும் கொதிக்கின்ற நெஞ்சமதில் சொல்லுமொழி
திருத்துகின்ற தீவினைகள் தீர்க்கின்ற உலகநெறி .


வருத்தத்தின் வேதனையால் வந்திடுமாம் வார்த்தைகளும்
கருத்தாழம் மிக்குடைய கள்ளமில்லா வாழ்வுநெறி .
விருப்பத்தில் கற்றிடுவோம் விளைந்திடுமாம் நல்வாழ்வு .
தருக்கங்கள் செய்யாதுத் தாய்மையினைப் போற்றிடுவோம் .


கண்ணிலுள்ள காட்சியெல்லாம் காவியமும் படைத்திடுதே .
மண்ணிலுள்ள 'மாதா'தான் மகத்தான பெருந்தெய்வம் .
விண்ணிலுள்ள விண்மீனும் விந்தைதனை உரைத்திடுமே .
பண்ணிலுள்ள இன்னிசையால் பலர்போற்ற எடுத்துரைப்போம் .


நேயமிக்கத் தாய்மையினை நேசத்தால் போற்றிடுவோம் .
காயமதை மாற்றுகின்ற காரிகையைப் போற்றிடுவோம் .
தீயனவும் கனல்கக்கி தீவினைகள் நீக்கியென்றும்
மாயமதைச் செய்கின்ற மாதாவை வணங்கிடுவோம் .


உதிரத்தை உணவாக மாற்றியவள் நம்மன்னை .
அதியன்பு கொண்டுநமை அன்புடனும் வளர்த்திடுவாள் .
கதியாகப் பற்றிடுவோம் கண்போலக் காத்திடுவோம் .
மதிபோன்ற முகத்துடனே மங்கையவள் மலர்ந்திடுவாள் .


கூடிநின்று போற்றிடுவோம் ; குவலயமாம் தாய்மையினை
வாடிநிற்க விடவேண்டாம் வரமாக நினைத்திடுவோம் .
பாடிநின்று வாழ்த்திடுவோம் பரவசமாய்த் தாய்தன்னை .
ஓடிவந்தே அணைத்திடுவா ளோங்கிடவும் செய்திடுவாள் .


இயற்கையினைப் போற்றுதலு மியல்பானத் தாயுள்ளம்
செயற்கையினை நீக்கிவிட்டு செல்வத்தைத் தந்திடுவாள் .
முயற்சியினைக் கைக்கொள்ள முழுதான முதற்கடவு
லயற்சியின்றி நன்சொல்வே னன்புடையத் தாய்மையினை .


காலங்கள் மாறிடினும் கருத்தென்றும் மாறாது
கோலங்கள் கொண்டுநமைக் கோபுரமாய்ச் செய்கின்ற
சீலங்க லெங்கிலுமே சிறந்திடுமாம் தாயன்பு .
பாலங்கள் கட்டிடுவோம் பணிந்துநாமும் போற்றிடுவோம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Dec-15, 12:08 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 89

மேலே